தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்கு செல்ல அரசு தடை?!
ராமேஸ்வரம்: கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் திருவிழாவில் தமிழக மீனவர்கள் கலந்து கொள்ள அரசு தடை விதித்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக முன்பு இருந்த கச்சத்தீவு பின்னர் இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது. இருப்பினும் தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் தங்களது வலைகளை உலர்த்திக் கொள்ளவும், ஓய்வு எடுக்கவும் உரிமை வழங்கப்பட்டது.
இருப்பினும், இலங்கை படைகள், தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பக்கம் வந்தாலே ஒன்று சுடுகிறது அல்லது பிடித்துக் கொண்டு போய் இலங்கை சிறைகளில் அடைக்கிறது.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் அங்கு செல்ல தமிழக அரசு அனுமதி மறுத்து வருகிறது.
இந்த நிலையில் இந்த வாரத்தில் புனித அந்தோணியார் திருவிழா நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள முடியுமா என்ற ஆதங்கத்தில் தமிழக மீனவர்கள் உள்ளனர்.
ஆனால் தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்கு செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தமிழக அரசு ஒரு உத்தரவினைப் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த உத்தரவில், கச்சத்தீவுக்கு யாரும் செல்ல அனுமதி கொடுக்கக் கூடாது. மீறிச் செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
இலங்கையில் புலிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே நடந்து வரும் கடும் சண்டை, இலங்கை கடற்படை கடலில் மிதக்க விட்டுள்ள கண்ணிவெடிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தத் தடையை அரசு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.
தடையை மீறி கச்சத்தீவுக்கு யாராவது செல்ல முயன்றால் அவர்கள் மீது இந்திய பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் நடவடிக்ைக எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
மேலும் கச்சத்தீவுக்கு யாத்ரீகர்களை அழைத்துச் செல்லும் படகுகள் பறிமுதல் செய்யபப்ட்டு அவற்றின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு மீன்வளத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவுக்கு யாரும் செல்லாமல் தடுக்க கடலோரக் காவல் படை மற்றும் கடற்படையின் உதவியையும் தமிழக அரசு நாடியுள்ளதாம்.
தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, ராமேஸ்வரம் மீனவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications