மகா அழுக்கான நகரம் மும்பை-நெரிசல் நகரம் சென்னை!
நியூயார்க்: உலகின் மிகவும் அசுத்தமான, சுகாதார சீர்கேடு நிறைந்த 25 நகரங்களில் இந்தியாவின் மும்பையும், டெல்லியும் இடம் பிடித்துள்ளன. மக்கள் நெருக்கம் மிக அதிகம் உள்ள 20 நகரங்களில் சென்னை உள்ளிட்ட 3 இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.
அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழில்தான் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை அவ்வப்போது வெளியிட்டு வரும் போர்ப்ஸ், தற்போது உலகின் அழுக்கான 25 நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் உலகின் அழுக்கான நகரங்கள் பட்டியலில் மும்பையும், டெல்லியும் இடம் பிடித்துள்ளன.
மகா அழுக்கு நகரங்களின் வரிசையில் மும்பைக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. டெல்லிக்கு 24வது இடம் கிடைத்துள்ளது. யமுனை நதியை டெல்லி மக்கள் அசுத்தப்படுத்தி வருவதாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உலகின் நம்பர் ஒன் அழுக்கு நகரம் என்ற பெயர் முன்னாள் சோவியத் குடியரசில் இடம் பெற்றிருந்த அஜர்பைஜானில் உள்ள பாகு நகருக்குக் கிடைத்துள்ளது. இங்கு எண்ணை வளம் அதிகம். ஆனால் அதுவே இந்த நகரின் தூய்மைக் கேட்டுக்கு முக்கியக் காரணமாகியுள்ளது.
2வது அழுக்கு நகரம் என்ற பெருமை, நமது பக்கத்து நாடன வங்கதேசத் தலைநகர் டாக்காவுக்குக் கிடைத்துள்ளது. இங்கு காற்றும், நீரும் மிகக் கடுமையாக மாசுபட்டுள்ளதாம்.
உலகம் முழுவதும் 200 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தப் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
காற்று மாசு, நீர் மேலாண்மை, சுகாதாரமான குடிநீர், மருத்துவ சேவை, மருந்துப் பொருட்களின் புழக்கம், நோய்களின் அளவு ஆகியவற்றை அளவுகோல்களாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
மக்கள் நெரிசல் மிக்க நகரங்கள்:
அதேபோல உலகின் மிக அடர்த்தியான (மக்கள் நெருக்கம்) நகரங்களின் பட்டியலை சிட்டிமேயர்ஸ்.காம் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.
முன்பு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியாவிலிருந்து மும்பையும், கொல்கத்தாவும் முதல் இரு இடங்களைப் பிடித்திருந்தன. அப்போது ஒரு சதுர கிலோமீட்டருக்கு 23,000 பேர் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதிய பட்டியலில் 3 இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் உள்ள 20 நகரங்களில் இந்தியா, சீனாவிலிருந்து மட்டும் 9 நகரங்கள் இடம் பிடித்துள்ளன.
இந்தப் பட்டியலில் சென்னைக்கு 8வது இடமும், டெல்லிக்கு 13வது இடமும், பெங்களூருக்கு 19வது இடமும் கிடைத்துள்ளன. பாகிஸ்தானின் கராச்சிக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.
வாபி, சுகிந்தா-மாசு நகரங்கள்:
அதேபோல போர்ப்ஸ் நடத்திய உலகின் மிகவும் மாசான 10 நகரங்கள் பட்டியலில் ஒரிசாவின் சுகிந்தா மற்றும் குஜராத்தின் வாபி ஆகிய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.












Click it and Unblock the Notifications