மீண்டும் தேவாரம் பாடினார் ஆறுமுகசாமி-தீட்சிதர்கள் மரியாதையை ஏற்க மறுப்பு

கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்ட ஓதுவார் ஆறுமுகச்சாமி உள்ளிட்ட 46 பேரும் நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டனர். முதல்வர் கருணாநிதியின் உத்தரவைத் தொடர்ந்து இவர்கள் கடலூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி பிறப்பித்த உத்தரவின் நகல், சிதம்பரம் 2வது குற்றவியல் நீதிபதி வசந்தியிடம் வழங்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு கடலூர் சிறை கண்காணிப்பாளர் முருகேசனிடம் வழங்கப்பட்டது. அதன் பேரில் ஓதுவார் ஆறுமுகச்சாமி உள்ளிட்ட 33 பேரும், தீட்சிதர்கள் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அதேபோல கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறார் சிறையில் அடைக்கப்பட்ட 2 சிறுவர்களும் விடுவிக்கப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆறுமுகச்சாமி, நடராஜர் கோவிலில் தொடர்ந்து தேவாரம் பாடல்களைப் பாடுவேன் என்று அறிவித்தார்.
அதன்படி இன்று காலை அவர் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தார். அவருடன் மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த ஐந்து வக்கீல்களும் உடன் வந்தனர்.
இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சென்று தாங்கள் திருச்சிற்றம்பலத்தில் தேவாரம் பாடப் போவதாக முறைப்படி தெரிவித்தனர்.
இதையடுத்து 6 பேரும் திருச்சிற்றம்பலத்திற்குள் சென்றனர். அங்கு ஆறுமுகசாமி ஓதுவார் பக்திப் பரவசத்துடன் தேவாரம் பாடினார்.
பாடி முடித்த பின்னர் அவருக்கு தீட்சிதர்கள் மாலை, மரியாதை செய்ய வந்தனர். ஆனால் அதை ஏற்க மறுத்து விட்டு அங்கிருந்து
வெளியேறினார் ஆறுமுகசாமி.
பெரியார் சிலைக்கு மாலை:
இதற்கிடையே, சிதம்பரத்தி்ல் மனித உரிமை பாதுகாப்பு மையம், விவசாயிகள் விடுதலை முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகியவற்றின் தொண்டர்கள் பெரும் திரளாக ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பட்டாசுகளையும் அவர் வெடித்தனர். தேவாரம் பாட அனுமதிக்கப்பட்டது தமிழுக்குக் கிடைத்த வெற்றி என்று கோஷமிட்டனர்.
மனித உரிமை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜி கூறுகையில், தமிழுக்குக் கிடைத்துள்ள வெற்றி இது. முதல்வர் கருணாநிதியே இந்த வெற்றிக்குக் காரணம். இதற்காக அவருக்கு விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும் என்றார்.
இன்று நாட்டியாஞ்சலி:
இத்தனைக் குழப்பத்திற்கு மத்தியில் வருடா வருடம் நடக்கும் நாட்டியாஞ்சலி விழா இன்று சிதம்பரத்தில் தொடங்குகிறது.
5 நாட்களுக்கு நடைபெறும் இந்த நாட்டிய விழாவில், பல்வேறு நாடுகளையும் சேர்ந்த நாட்டியக் கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிவனடியார்கள், தீட்சிதர்கள் மோதல் தொடர்பாக பதட்டம் நிலவுவதால் நாட்டியக் கலைஞர்களுக்கும், நாட்டியாஞ்சலி விழாவுக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications