கண்டி சார்க் மாநாடு கொழும்புக்கு திடீர் மாற்றம்
கொழும்பு: இலங்கையின் கண்டி நகரில் நடைபெறுவதாக இருந்த சார்க் உச்சி மாநாடு, பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளது.
இலங்கையின் கலாச்சார நகரான கண்டியில் ஜூலை 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விரிவான முறையில் செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில் மாநாட்டை கொழும்புக்கு திடீரென இலங்கை அரசு மாற்றியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இடம் மாற்றப்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவிநாத் ஆரியசிங்கா கூறுகையில், கொழும்பில் கூட்டத்தொடரை நடத்துவது பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு அனுகூலமானது. மேலும் மலையகப் பிரதேசமான கண்டியை குறிப்பிட்ட சிறிது காலத்திற்குள் அபிவிருத்தி செய்வதும் கடினமானது.
கண்டியில் பிரதிநிதிகள் தங்குவதற்கு போதுமான விடுதி வசதிகளும் கிடையாது. எனவே கொழும்பில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
இம் மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், பூட்டான், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
கண்டியில் உள்ள அனைத்துலக பௌத்த மையத்தில் இந்த கூட்டத் தொடரை நடத்துவதற்கும் ஏனைய கூட்டங்களையும், கலாச்சார நிகழ்வுகளையும் பெரதேனியா பல்கலைக்கழக வளாகத்திலும் நடத்துவதற்கும் முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications