கோனேரிப்பட்டு கிராமத்தில் தினம் ஒரு மரம் நடும் ராமதாஸ்

திண்டிவனம் மாவட்டத்தில் கோனேரிப்பட்டி கிராமத்தில் தினமும் ஒரு மரத்தை நட்டு வருகிறார் ராமதாஸ்.
ஈரோடு மாவட்ட பாட்டாளி இளைஞர் சங்கத்தின் சார்பில் உறுதிமொழி ஏற்பு மாநாடு நடைபெற்றது. இதில், ராமதாஸ் பேசுகையில்,
இந்தியாவின் நம்பிக்கைகளாக இருக்கிற இளைஞர்கள் இன்று ஆபாசம், வன்முறை, கூலிக்கு கொலை செய்வது என்று அடையாளம் காட்டப்படும் போது, வயிறு எரிகிறது.
நாட்டை உருவாக்க வேண்டிய சக்தி வன்முறையில் சென்று விட்டதே என்று மனம் துடிக்கிறது. அந்த துடிப்பு எனக்கு இருக்கிறது. பா.ம.கவிற்கு இருக்கிறது. அந்த வழிகளை விட்டு வெளியே வாருங்கள் என்று அழைக்கிறோம்.
முன்பு 1000 ஆணுக்கு 1050 பெண் என்று இருந்த நிலை மாறி இன்று 1000 ஆணுக்கு 872 பெண் என்கிற நிலை உருவாகி விட்டது. காரணம் பெண் சிசுக் கொலை. அதை உருவாக்கியது வரதட்சணை. எனவே இவை ஒழிய வேண்டும் என்று கூறுகிறோம்.
நமது நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளான சடுகுடு, சிலம்பம் ஆகியவற்றை மறந்து மட்டைப் பந்து எனப்படும் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். நான் ஒரு கால்பந்து வீரன், சத்தியமாக எனக்கு கிரிக்கெட்டை பற்றி எதுவும் தெரியாது.
மது உற்பத்தியை கட்டுப்படுத்துவது என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதுபற்றி அரசியல் சட்டம் 47ல் கூறப்பட்டு இருக்கிறது. மதுக்கடைகளை மூட முடியாவிட்டால், மதுவிலக்கை அமல்படுத்துவதில் நம்பிக்கை இல்லை என்று அறிவிக்கலாமே. கள்ளச் சாராயம் பெருகும் என்கிறார்கள். ஒரு சொட்டு சாராயம் கூட இல்லாமல் தமிழகத்தை மாற்ற என்னிடம் திட்டம் இருக்கிறது.
தந்தை பெரியாரை, அண்ணாவை வழிகாட்டியாக கொண்டு உள்ள நீங்கள் ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. படிப்படியாக செயல்படுத்துங்கள். 2 தலைமுறைகள் வீணாகிவிட்டன. இனிமேல் இது தொடரலாமா. நான் ஆண்டவனிடம் கேட்கவில்லை. நம்மை ஆண்டவர்களிடம், ஆட்சி செய்பவர்களிடம் கேட்கிறேன்.
உலகில் 2 பெரிய சக்திகளிடம் யாரும் மோத முடியாது. ஒன்று புகையிலை, மற்றொன்று மது. இந்த 2 சக்திகளும் மிகப்பெரிய உலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இளைஞர்களை சீரழித்துக்கொண்டு இருக்கின்றன. எனவேதான் என் இளைஞர்களே நீங்கள் உங்கள் உறவினர்கள் நண்பர்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்றால், அவரை வேறு பாதைக்கு திருப்புங்கள். அவரிடம் பேசுங்கள், மதுவின் கொடுமை பற்றி எடுத்துக்கூறுங்கள்.
இதற்கு அடுத்து நமது காலாசாரத்தை பண்பாட்டை சீரழிப்பவை சினிமாக்களும், தொலைக்காட்சிகளும். சினிமாவும், தொலைக்காட்சியும் அறிவியலில் அற்புதமான கொடை.
ஆனால் இன்று ஆபாசம், வன்முறைகளை தூண்டும், பண்பாட்டை சீரழிக்கும் கருவிகளாக அவை உள்ளன. இந்த சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட 10 அறிஞர்களை அழைத்து கேட்டுப்பாருங்கள். அவர்கள், சினிமாவும், டி.வியும் சமூகத்தை சீரழிக்கவில்லை என்று கூறினால், நான் இந்த கட்சியை கலைத்து விடுகிறேன். பிரசாரங்களை நிறுத்தி விடுகிறேன்.
தமிழ்நாடு அழிய வேண்டுமா? நமது கலாசாரம், பண்பாடு, மொழி அழிய வேண்டுமா?. இவற்றுக்கு மாற்று வழி என்ன? அதைத்தான் நாங்கள் நடத்தும் தொலைக்காட்சி வழியாக கொடுக்கிறோம். அதை பார்த்து நாடு கடந்து வாழும் தமிழர்கள் எல்லாம் அற்புதம் என்று பாராட்டுகிறார்கள். இதுபோல் மக்களை சீரழிக்காத சினிமாக்களும், தொலைக்காட்சிகளும் வரவேண்டும்.
பா.ம.கவினர் மரங்கள் நடவேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறேன். இந்தியாவில் ஒருவன் தினமும் மரம் நட்டுக்கொண்டு இருக்கிறான். அவன் யார் என்று உங்களுக்கு தெரியுமா? அது நான்தான். திண்டிவனம் மாவட்டத்தில் கோனேரிப்பட்டி கிராமத்தில்தான் நான் தினமும் மரம் நட்டு வருகிறேன் என்றார்.
முன்னதாக சென்னையில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தமிழ் மொழி வளர்ச்சிக்கான ஆக்கப்பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அறக்கட்டளையின் நிறுவனரான ராமதாஸ் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி, தமிழறிஞர் ம.நன்னன், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொற்கோ, இயக்குனர் சீமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்,
தமிழுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை கணித்து சொல்ல வேண்டிய கூட்டம் இது. அதற்கான வரைவறிக்கை உங்களிடம் கொடுத்துள்ளோம். அதற்கு இறுதி வடிவம் கொடுத்து அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். அரசும் இதன் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது பேசும் 10 தமிழ் வார்த்தைகளில் 8 வார்த்தை ஆங்கிலம் கலந்ததாகத்தான் இருக்கிறது. மீதம் உள்ள 2 தமிழ் வார்த்தைகளும் பிற வார்த்தை கலந்தது தான். இதை நாம் தான் தமிழ் என நினைக்கிறோம்.
இந்த காலத்தில் ஆங்கிலத்திற்கு முற்று புள்ளி வைத்து எல்லோரும் நல்ல தமிழில் பேசவும், எழுதவும் வேண்டும். தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்.
தமிழ் மொழியின் விடிவு காலத்திற்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம்.
தமிழர்களாகிய நாம் தமிழின் மீது ஆர்வம் கொண்டு, தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுவோம். தமிழ் வளர்ச்சி குறித்து கலந்தாய்வுச் செய்யப்பட்டு இறுதி அறிக்கை முதல்வர் கருணாநிதியிடம் தமிழறிஞர்கள் வழங்குவார்கள்.
வரும் கல்வி ஆண்டிலேயே பள்ளிகளில் தமிழ் வழி கல்வியை 100 சதவீதம் கொண்டு வரவேண்டும். அதை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் கல்வி கொள்ளையர்களை உதைக்க வேண்டும்.
மேலும், யாரும் நீதிமன்றம் செல்லாமல் இருக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications