"நான் தற்கொலை பண்ணிப்பேன்.." பிரதமராக இருந்தபோதே மனசு உடைந்து மன்மோகன் சிங் சொன்ன வார்த்தை!
டெல்லி: இந்தியாவை வழிநடத்திய பிரதமர்களில் முக்கியமானவர் மன்மோகன் சிங். அவர் பதவியில் இருந்தபோது விமர்சித்த பலரும் கூட இப்போது அவரை கொண்டாடுகிறார்கள். இதற்கிடையே அவர் எந்தளவுக்கு தனித்துவமான மற்றும் முக்கியமான தலைவர் என்பதை நிரூபிக்கும் வகையிலான ஒரு சம்பவம் குறித்த தகவல்கள் மாஜி தேர்தல் ஆணையர் குரேஷி பகிர்ந்துள்ளார். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
மோடி பிரதமராகும் முன்பு 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். யுபிஏ அரசில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், நாட்டை வழிநடத்தியவர்களில் முக்கியமானவர். யுபிஏ அரசின் மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள் இருந்தாலும் மிஸ்டர் கிளீனாக இருந்தவர் மன்மோகன் சிங். அவர் பிரதமர் பதவியில் இருந்தபோது விமர்சித்த பலரும் இப்போது அவரை கொண்டாடுகிறார்கள்.

குரேஷி
இதற்கிடைடேய டாக்டர் மன்மோகன் சிங்கின் நேர்மை, எளிமை மற்றும் ஜனநாயக அமைப்புகள் மீதான அவரது மரியாதையை வெளிப்படுத்தும் ஒரு சம்பவத்தை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தனது புதிய புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். எஸ்.ஒய். குரேஷி "India and I: A Hundred Memories, Not a Memoir" என்ற புத்தகத்தை எழுதும் நிலையில், அதில் 2012 உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தல் காலத்தில் நடந்த ஒரு விஷயம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், தேர்தல் பிரசாரத்தின் போது முஸ்லிம்களுக்கான வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டை 4.5 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்துவோம் என்று வாக்குறுதி அளித்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த நேரத்தில் இதுபோன்ற அறிவிப்பை வெளியிடுவது சட்டவிரோதம் எனச் சொல்லி, பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.
மன்மோகன் சிங்
இதையடுத்து பாஜக மற்றும் காங்கிரஸ் விளக்கங்களை கேட்ட தேர்தல் ஆணையம், சல்மான் குர்ஷித்துக்கு கண்டனம் தெரிவித்தது. இந்த நடவடிக்கைக்குக் காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் தேர்தல் ஆணையத்தைக் கடுமையாக விமர்சித்தனர். இந்த விமர்சனங்கள் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையைப் பாதிப்பதாகக் கருதிய குரேஷி, அப்போது பிரதமரின் ஊடக ஆலோசகராக இருந்த ஹரீஷ் கரேவிடம் தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.
தற்கொலை செய்து கொள்வேன்
இந்த தகவல் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சென்ற நிலையில், மறுநாளே அவர் குரேஷியை நேரில் சந்திக்க அழைத்ததாக கூறப்படுகிறது. மாலை நடைபெற்ற அந்த சந்திப்பில் மன்மோகன் சிங் மிகவும் வேதனையுடன் பேசியதாக குரேஷி எழுதியுள்ளார். அவர் மேலும், "குரேஷி ஜி, நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள் என்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன்" என்று மன்மோகன் சிங் கூறியதாக அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் தான் அதிர்ச்சியடைந்ததாக குரேஷி குறிப்பிட்டுள்ளார். தனது குற்றச்சாட்டு சில அமைச்சர்கள் மீது தானே தவிர பிரதமரை பற்றியது அல்ல என்று விளக்கம் தந்தாராம். மேலும், "இந்த விவகாரம் எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் அவர்களை கடுமையாகக் கண்டித்திருப்பேன். இனிமேல் ஏதேனும் பிரச்சனை இருந்தால் நேரடியாக என்னைத் தொடர்புகொள்ளுங்கள்" என்று மன்மோகன் சிங் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையம்
மேலும், தேர்தல் ஆணையம் இந்தியாவின் பெருமை மட்டுமல்ல.. அது நமது ஜனநாயகத்தின் ஆன்மா. அதை இழந்துவிட்டால் நாம் அனைத்தையும் இழந்துவிடுவோம்" என்றும் மன்மோகன் சிங் கூறியதாக குரேஷி தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு தேர்தல் ஆணையம் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் உடனடியாக நின்றுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரத்தின் உச்சியில் இருந்த போதும் தனது பிரச்சனையை மிகவும் பொறுப்புடன் கையாண்ட தலைவர்களில் மன்மோகன் சிங் தனித்துவமானவர் என்றும் குரேஷி தனது புத்தகத்தில் பாராட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications