ஆஸி. இந்தியப் பெண்ணுடன் காதலா? பதான் நழுவல்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய தூதரக அதிகாரியின் மகள் ஷிவாங்கி தேவ். இவருக்கும் இர்பான் பதானுக்கும் காதல் ஏற்பட்டிருப்பதாக சூடான தகவல் பரவியுள்ளது.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த காமன்வெல்த் பேங்க் முத்தரப்பு தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியினர் நாடு திரும்பி விட்ட நிலையில் பதான் மட்டும் வராமல் அங்கேயே இருந்தார். காரணம், ஷிவாங்கி தேவ் என்று கூறப்பட்டது.
அணிக்கு வெற்றி சேர்த்த வீரரை வரவேற்க ரசிகர்களும், மீடியாக்களும் காத்திருக்க, ஷிவாங்கியுடன் பதான் ஜாலியாக ஆஸ்திரேலியாவில் சுற்றிக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை பதான் குடும்பத்தினர் மறுத்தினர்.
இந்தநிலையில் பதான் நாடு திரும்பினார். இதை அறிந்த மீடியாக்கள், வடோதராவின் தண்டால்ஜா பகுதியில் உள்ள அவரது வீட்டில் மொய்த்துவிட்டன.
ஷிவாங்கிக்கும், பதானுக்கும் உள்ள நெருக்கம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்துவிட்டனர். ஆனால் அந்த கேள்விகளுக்கு நேரிடையாக பதில் சொல்வதை பதான் சாமர்த்தியமாகத் தவிர்த்து விட்டார்.
ஷிவாங்கி பற்றி கேட்டதற்கு இதற்கு பதில் சொல்லி, நான் எந்த சர்ச்சைக்கும் ஆளாக விரும்பவில்லை என்று கூறி மறுத்து விட்டார் பதான்.
ஆஸ்திரேலியாவில் இருந்து இந்திய அணி திரும்பியபோது, தான்மட்டும் அங்கு தங்கியதற்குக் காரணம், உடல் நலம் குன்றிய நெருங்கிய உறவினர் ஒருவரைப் பார்ப்பதற்காகத்தான் என்று விளக்கம் அளித்தார் பதான்.
ஆனால், அந்த உறவினர் யார் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. அப்போது பதானுடன் இருந்த அவரது தந்தை மெஹ்மூத்கானிடம் இதே கேள்வியைக் கேட்டபோது அவரையும் பதில் சொல்லவிடாமல் பதான் தடுத்துவிட்டார்.
செய்தியாளர்களும் அசராமல் பதானிடம் தொடர்ந்து கிடுக்கிப்பிடி கேள்விகளை அள்ளி வீசினர். ஷிவாங்கி பற்றியும், ஒருவேளை பதான் கலப்புத் திருமணம் செய்து கொண்டாலும் அதைத் தங்கள் குடும்பம் ஆதரிக்கும் என்று முன்பு ஒருமுறை பதானின் தந்தை கூறியதை பத்திரிகையாளர்கள் நினைவுபடுத்தினர்.
இதற்கு, கும்பிடு போடாத குறையாக, ''தயவுசெய்து இந்த விஷயத்தில் எனது குடும்பத்தாரையெல்லாம் இழுக்காதீர்கள்'' என்றார் பதான்.
கடந்த ஆண்டு பதானின் வீட்டுக்கு ஷிவாங்கி வந்து தங்கிச் சென்றதை ஏற்கெனவே அவரது குடும்பத்தார் ஒத்துக்கொண்டுள்ளனர். மேலும் பதானும், ஷிவாங்கியும் நல்ல நண்பர்கள் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேட்டியளித்த பதான், ''வெற்றியுடன் திரும்பிய இந்திய அணிக்கு டெல்லியில் மார்ச் 6 ம் தேதி அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பில் பங்கேற்க முடியவில்லையே என்று உண்மையிலேயே ஏங்கினேன்.
முந்தைய ஓவர்களில் நான் அதிக ரன்களை விட்டுத் தந்தபோதும் என் மீது கேப்டன் டோனிக்கு அபார நம்பிக்கை இருந்தது. கடைசி ஓவரை நான்தான் வீச வேண்டும் என்று கூறினார். டோனியின் நம்பிக்கையும், சச்சின் மற்றும் ஹர்பஜனின் உற்சாக வார்த்தையிலும் புத்துயிர் பெற்று அந்த ஓவரை வீசினேன்.
ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியதற்கு முழுமுதற் காரணம், அணி வீரர்கள் மீது கேப்டன் டோனி வைத்த நம்பிக்கை மற்றும் முக்கியமான கட்டங்களில் அவர் எடுத்த முடிவுகள்'' என்றார்.
--












Click it and Unblock the Notifications