5 மணி நேரம் கழித்தே சுனாமி தாக்கியது ஜெவுக்கு தெரியும்: கருணாநிதி
சென்னை: தமிழகத்தை சுனாமி அதிகாலை 5 மணிக்கு தாக்கியது. ஆனால், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை எழுப்பி அதைச் சொல்ல யாருக்கும் தைரியம் இல்லாததால் அவருக்கு 10 மணிக்குத் தான் சுனாமி தாக்கியதே தெரியும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: மைனாரிட்டி திமுக ஆட்சியின் கையாலாகாத்தனத்தால், சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தங்கள் உடைமைகளை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர் என்று ஜெயலலிதா உங்களை குற்றம் சாட்டியிருக்கிறாரே?
பதில்: சுனாமி தமிழகத்தைத் தாக்கியது 2004 டிசம்பர் 26ம் தேதி விடியற் காலை 5 மணி முதல். அப்போது அதிமுக ஆட்சி நடந்தது. அப்போது முதல்வர் ஜெயலலிதா. அதற்குப்பின் இரண்டு ஆண்டு காலம் வரை ஜெயலலிதாதான் ஆட்சியில் இருந்தார். சுனாமி தமிழகத்தைத் தாக்கிய செய்தி அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு 10 மணி வரை தெரியாது. காரணம், தூங்கிக் கொண்டிருந்த அவரை எழுப்பி இதைச் சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை. இதெல்லாம் அப்போதே வெளிவந்த செய்திகள்.
பதவியில் இருந்த ஜெயலலிதா, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்த நிவாரண உதவி எவ்வளவு, அதன்பின் ஆட்சிக்கு வந்த திமுக செய்த நிவாரண உதவி எவ்வளவு என்பதைப் பற்றி அவருக்கு தெரிந்த ஐஏஎஸ் அதிகாரிகள் இருந்தால் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அவர் விளக்கம் பெறலாம்.
கேள்வி: தனது ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சுனாமி நிவாரணப் பணிகளைக் கண்டு பொறுக்காத கருணாநிதி, முற்றிலும் மாநில அரசைப் புறக்கணிக்கும் வகையில் ப.சிதம்பரம் மூலமாக ராஜிவ் காந்தி மறுவாழ்வுத் தொகுப்பு உதவித் திட்டம் என்ற திட்டத்தை அறிவிக்கச் செய்தார் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
பதில்: அவசரத்திலும், ஆத்திரத்திலும் என்ன சொல்கிறோம் என்று புரியாமலேயே, ராஜிவ் காந்தி பெயரில் மீனவர்களுக்கு உதவ வேண்டுமென்ற திட்டத்தை நான்தான் அறிவிக்கச் செய்தேன் என்பதை ஜெயலலிதா ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், தனது ஆட்சிக் காலத்தில்தான் நிவாரணப் பணிகள் நடந்ததாகவும், திமுக ஆட்சியில் எதுவும் செய்யப்படவில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.
ஜெயலலிதா ஆட்சியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கட்டிய வீடுகளின் எண்ணிக்கை 8,406. திமுக ஆட்சியில் மீனவர்களுக்கு கட்டிய வீடுகளின் எண்ணிக்கை 26,862. திமுக ஆட்சியில் மீனவர்களுக்கு கூடுதல் நிவாரணப் பொருட்கள் மட்டும் வழங்க ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மீனவ பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.102.36 கோடி சுழல் நிதியாகவும், பொருளாதார உதவியாக ரூ.39.40 கோடியும் இரண்டு ஆண்டுகளில் வழங்கப்பட்டு, அதனால் 42,500 மீனவ மகளிர் பயனடைந்துள்ளனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட உடல் ஊனமுற்ற 35 ஆயிரத்து 725 பேருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.35 கோடியே 75 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
கேள்வி: இலவசம் கொடுப்பது மலிவான அரசியலா?
பதில்: இல்லாதவர்களுக்கு, அதாவது வாங்க இயலாதவர்களுக்கு இலவசமாகக் கொடுப்பது மலிவான அரசியல் அல்ல. வாங்க இயலாதவர்களை, வாங்கக் கூடிய அளவுக்கு முன்னேற்ற வேண்டும் என்பது முக்கியம். அதற்கு கால அவகாசம் தேவைப்படும். அந்த அவகாசம் வரும் வரை அவர்களுக்கு இலவசமாக அளிப்பது ஒன்றும் மாபெரும் தவறல்ல. வேலை வாங்கிக் கொடுத்தால், அவர்கள் டிவி வாங்கிக் கொள்வர்தான்.
ஆனால், தமிழகத்தில் உள்ள அத்தனை வேலையில்லாதவர்களுக்கும் ஒரே நாளில் வேலை கொடுப்பது சாத்தியமான காரியமா? வேலையில்லாதவர்களுக்கு வேலை கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அதே நேரத்தில் சிலவற்றை இலவசமாக கொடுக்கிறோம். இது மலிவான அரசியல் என்றால், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பது கூட மலிவான அரசியல் என்றாகிவிடும் அல்லவா?
கேள்வி: திமுக அல்லது அதிமுகவின் ஆட்சியின்போது ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டதாக பழ.நெடுமாறன் எழுதியிருக்கிறாரே?
பதில்: நெடுமாறனையும் அவர் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள நண்பர்களையும் மாதக் கணக்கில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தவர் ஜெயலலிதா. அவர்கள் சிறையில் வாடியபோது, அவர்களை சந்தித்து, அவர்கள் விடுதலை பெற எந்தளவுக்கு நான் பாடுபட்டேன் என்பதை இந்தத் தமிழகமே நன்கறியும். ஆனால், ஆட்சி மாறிய பிறகும் பலர் மீதுள்ள வழக்குகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என்று நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.
42 பேரில் நான்கு பேர் மீதான வழக்கு திரும்பப் பெற்றுவிட்டால் மீதம் 21 வழக்குகள்தானா என்பதை அவர் கட்டுரையை படித்தவர்களே பார்த்துச் சிரிப்பார்கள். பொடா வழக்குகள் அனைத்தையும் தமிழக அரசே நேரடியாக திரும்பப் பெற முடியாது. கோர்ட்தான் அதன் மீது தீர்ப்பு கூற வேண்டும். அரசைப் பொறுத்தவரை, நீதிமன்றத்தில் வழக்குகளை திரும்பப் பெறுவதாக எழுதிக் கொடுத்தாலும் அவை நிலுவையில் இருப்பதற்கு, அரசு என்ன செய்ய முடியும்?
கேள்வி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, மதுராந்தகத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது குறித்து அவர் மீது அரசாங்கம் வேண்டுமென்றே நடவடிக்கை எடுப்பதைப் போலப் பேசியிருக்கிறாரே?
பதில்: இதற்கும் அரசாங் கத்திற்கும் எந்தவிதமான சம்மந்தமும் கிடையாது. அவர் மதுராந்தகத்தில் நிலம் வாங்கியிருப்பதில் ஏதோ ஒரு பகுதி நிலம் அரசு புறம்போக்கு நிலம். அதை யாரோ ஏமாற்றி தங்களுடைய நிலம் என்பதாகச் சொல்லி அவரிடம் விற்றிருக்கிறார்கள். இவர் வாங்கும்போது அது எப்படிப்பட்ட நிலம் என்பதையெல்லாம் வழக்கறிஞர்கள் மூலமாக நன்றாக சோதனை செய்து வாங்கியிருக்க வேண்டும்.
அரசாங்க நிலத்தை யாராவது வாங்கியிருந்தாலோ, அல்லது அதற்கு உரிமை கோரினாலோ மாவட்ட அளவில் உள்ள அரசு அதிகாரிகள் அது குறித்து நடவடிக்கை எடுக்கும்போது, அதற்கான விளக்கத்தை அளித்து விட்டுப் போக வேண்டுமே தவிர, அரசாங்கமே நேரடியாகத் தலையிட்டு ஏதோ பழிவாங்குவதாக கருதிக் கொள்ளக் கூடாது. அப்படி மக்களிடம் தவறான பிரச்சாரம் செய்வதும் கூடாது.
அவர் தனது பேச்சில் அவரிடம் உள்ள தைரியத்தை யாரும் எடுத்துக் கொள்ள முடியாது என்றெல்லாம் தேவையில்லாமல் பேசியிருக்கிறார்.
இந்த பிரச்சினையில் அவசரமோ ஆத்திரமோ கொள்ளத் தேவையில்லை. திமுக அரசு ஆட்சியிலே இருக்கும் நேரத்தில் அவசரப்பட்டு சட்ட விதிகளுக்கு புறம்பாக தவறான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படமாட்டாது.
கேள்வி: அதிமுகவிற்காகவும், அதன் தலைவி ஜெயலலிதாவிற்காகவும் வாதாடிய வழக்கறிஞர் ஜோதியின் ராஜினாமா பற்றி?
பதில்: உண்மை புரிவதற்கு திறமைசாலிகளுக்கே காலம் தேவைப்படத்தான் செய்கிறது.
இவ்வாறு அதில் கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications