விஜய்காந்த் 'ஸ்வாகா' செய்த 28 ஏக்கர் நிலம் மீட்பு- அதிகாரிகளை சிறை வைத்த தேமுதிகவினர்!
மதுராந்தகம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே விஜயகாந்த்துக்குச் சொந்தமான கேப்டன் பண்ணை நிலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 28 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டது. இந்தப் பணியின்போது அதிகாரிகளை உள்ளுக்குள் வைத்து வெளி கேட்டை மூடி சிறை வைத்த தேமுதிகவினரை போலீஸார் விரட்டியடித்தனர்.
மதுராந்தகம் தாலுகாவில் உள்ள விளாகம், அருங்குணம், முள்ளி, முருக்கஞ்சேரி, தேவாத்தூர் ஆகிய கிராமங்களில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா பெயரில் 402 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த இடத்தைச் சுற்றிலும் மின்சார வேலி போட்டு, கேப்டன் பண்ணை என இதற்குப் பெயரிட்டுள்ளார் விஜயகாந்த். இந்த நிலத்தில் 28 ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு நிலம், ஏரி நிலம், கோவில் நிலம் என சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆய்வும் மேற்கொண்டனர். இறுதியில் 28 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு நிலம் என கண்டறியப்பட்டது. இதையடுத்து விஜயகாந்த்துக்கு நிலத்தைக் காலி செய்யுமாறு கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் நிலத்தை அரசிடம் ஒப்படைக்கவில்லை.
இதையடுத்து நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள், தாசில்தார் நடராஜன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கேப்டன் பண்ணைக்கு விரைந்தனர்.
ஆனால் வெளி கேட்டின் சாவியை தர விஜயகாந்த் தரப்பு மறுத்ததால், மின் வேலியை பிய்த்து எறிந்து விட்டு உள்ளே சென்றனர் அதிகாரிகள்.
அதிகாரிகள் குழுவில் தாசில்தார்கள் டெய்சிகுமார், முனுசாமி, கேசவலு மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள், உதவி செயற்பொறியாளர் ரவி தலைமையில் பொதுப்பணித்துறையினர் இடம் பெற்றிருந்தனர்.
டி.எஸ்.பி., சந்திரசேகர் தலைமையில் 40 போலீசார் பாதுகாப்புக்கு உடன் சென்றனர்.
கேப்டன் பண்ணைக்குள் சென்ற அதிகாரிகள், விளாகம், முருக்கஞ்சேரி ஆகிய கிராமப் பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான நிலத்திலிருந்த மரக்கன்றுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றினர்.
முள்ளி ஓடை புறம்போக்கில் 12 வருடங்களுக்கு முன் விஜயகாந்த் ரூ.ஏழு லட்சம் மதிப்பில் கட்டியிருந்த பாலத்தை இடிக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர்.
அப்போது காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக செயலாளர் அனகாபுத்தூர் முருகேசன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் அங்கு வந்தனர். பாலத்தை உடைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதை பொதுமக்கள் பயன்படுத்துவதாகவும் அவர்கள் கூறினர். ஆனால் அதை அதிகாரிகள் ஏற்கவில்லை.
இந்த நிலையில் சிலர், மெயின் கேட் உள்ள இடத்தில் பெரிய பள்ளத்ைதத் தோண்டினர். இதனால் அதிகாரிகளால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் அங்கு வந்து தேமுதிகவினரை தடியால் அடித்து விரட்டினர். பின்னர் பள்ளத்தில் மண்ணைப் போட்டு நிரப்பினர். அதன் பின்னர் மெயின் கேட்டின் சாவியை வைத்திருந்தவரை விரட்டிப் பிடித்து சாவியை வாங்கி கேட்டைத் திறந்தனர். இதன் பின்னரே அதிகாரிகள் வெளியே வர முடிந்தது.
நேற்று நடந்த கையகப்படுத்தும் பணியின்போது விஜயகாந்த் வசம் இருந்த ஆக்கிரமிப்பு நிலங்கள் பிரிக்கப்பட்டு அரசு வசம் எடுத்துக் கொள்ளப்பட்டது.












Click it and Unblock the Notifications