சஸ்பென்ஸுக்கு முடிவு - பாக். பிரதமராகிறார் கிலானி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் யூசுப் ரஸா கிலானி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். முஷாரப் ஆதரவு முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் பர்வேஸ் இலாஹியும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

பாகிஸ்தானில், பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி தனிப் பெரும் கட்சியாக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கட்சி 2வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கவுள்ளன.

இந்த நிலையில் பிரதமர் பதவிக்கு யாரை நிறுத்துவது என்பதில் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் பெரும் குழப்பம் நிலவி வந்தது. பெனாசிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரியே பிரதமராகப் போகிறார் என்று ஒரு பேச்சு நிலவியது. அவரது உறவினரான அஸ்ராவை நிறுத்தப் போவதாக ஒரு தகவல் வெளியானது.

மூத்த தலைவரான மக்தூம் அமீன் பாஹிமும் போட்டிக் களத்தில் இருந்தார். இந்த நிலையில், பல்வேறு ஆலோசனைகளுக்குப் பின்னர் தற்போது முன்னாள் சபாநாயகர் மக்தூம் யூசுப் ரஸா கிலானியை வேட்பாளராக பாகிஸ்தான் மக்கள் கட்சி அறிவித்தது.

கட்சியின் இணைத்தலைவர் ஆசிப் அலி சர்தாரி கிலானியின் பெயரை அறிவித்தார். கட்சி மற்றும் கூட்டணியின் ஒரு மனதான தேர்வு கிலானி என சர்தாரி தெரிவித்தார். இதுதொடர்பான சர்தாரியின் அறிக்கையை கட்சியின் செய்தித் தொடர்பாளர் பர்கத்துல்லா பாபர் வாசித்தார்.

பூட்டோ விசுவாசி:

முல்தானைச் சேர்ந்தவர் கிலானி. பூட்டோ குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர், விசுவாசமானவர். 30 ஆண்டுகாலமாக அரசியலில் இருக்கிறார்.

1952ம் ஆண்டு பிறந்த கிலானி, இதழியலில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர் ஆவார். 1978ம் ஆண்டு அரசியலில் நுழைந்த கிலானி, 1988ம் ஆண்டு பாகிஸ்தான் மக்கள் கட்சியில் இணைந்தார்.

1993ம் ஆண்டு முதல் 96 வரை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் 2வது ஆட்சிக்காலத்தில், நாடாளுமன்ற சபாநாயகராக பதவி வகித்தார்.

சர்தாரிக்கு நன்றி - கிலானி:

தன்னை நம்பி மிகப் பெரிய பொறுப்பைக் கொடுத்துள்ளதற்காக சர்தாரிக்கு நன்றி தெரிவிப்பதாக கிலானி கூறியுள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ஆசிப் அலி சர்தாரிக்கும், அவரது மகன் பிலாவல் பூட்டோவுக்கும் நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

பாகிஸ்தான் பிரதமர் பதவி என்பது மிகவும் சவாலானது. அதை சமாளித்து, மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுவேன் என்றார் கிலானி.

மனு தாக்கல் செய்தார்

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கிலானி இன்று பிற்பகலில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற வளாகத்திற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் புடை சூழ சென்ற கிலானி, வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

இதேபோல, முஷாரப் ஆதரவு முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் பஞ்சாப் மாகாண முதல்வருமான செளத்ரி பர்வேஸ் இலாஹியும் இன்று பிரதமர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பெனாசிர் கட்சி மற்றும் நவாஸ் ஷெரீப் கட்சிகளுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் பிரதமர் தேர்தலில் கிலானி வெற்றி பெறுவது உறுதி
என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பதவிக்கு முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், மார்ச் 25ம் தேதி கிலானி பிரதமராக பதவியேற்கவுள்ளார். 1973ம் ஆண்டு அரசியல் சட்டத்தின் கீழ் அவர் பிரதமர் பதவியேற்கிறார். அவருக்கு அதிபர் முஷாரப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். பதவியேற்ற பின்னர் 60 நாட்களுக்குள் தனது அரசின் பெரும்பான்மை பலத்தை கிலானி நிரூபிக்க வேண்டும்.

அன்று மாலை 4 மணிக்கு நாடாளுமன்றத்தை அதிபர் முஷாரப் கூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+