'பெங்களூரு எங்களூரு': பாமக எச்சரிக்கை!
பெங்களூர்: ஓகனேக்கல் எங்களுக்குச் சொந்தமானது என்று கர்நாடகத்தினர் கூறினால், பின்னர் பெங்களூரை எங்களூரு என்று நாங்கள் கூற நேரிடும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி எச்சரித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று கொண்டு வரப்பட்ட பெங்களூர் வன்முறை தொடர்பான சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் மீது நடந்த விவாதத்தில் பங்கேற்று ஜி.கே.மணி பேசுகையில், நல்ல திட்டத்தை நிறைவேற்ற விடாமல் வெறி பிடித்த கன்னட அமைப்புகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பிரச்னையை எடியூரப்பா கையில் எடுத்துள்ளார். அவர் விரித்த வலையில் சில கன்னட அமைப்புகளும் விழுந்துள்ளன.
குடிநீர் பிரச்னையோடு சேர்த்து இப்போது எல்லை பிரச்னையையும் கிளப்புகின்றனர். அண்டை மாநிலத்துடன் சகோதர உறவை வளர்க்கும் வகையில் முதல்வர் செயல்பட்டு வருகிறார். தமிழக முதல்வர் கொடும்பாவியை எரித்திருப்பது வருந்தத்தக்கது.
எல்லை பிரச்னை 40 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து விட்டது. இப்போது மனிதாபிமானம் இல்லாமல் பேசி வருகின்றனர்.நீங்கள் (கர்நாடகா) பிரச்னையை கிளப்பினால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.
தேவையில்லாமல் நீங்கள் எல்லை பிரச்னையை எழுப்பினால், நாங்களும் பிரச்னையை எழுப்புவோம். பெங்களூரு எங்களூரு என்போம். கோலார் மாவட்டம் எங்கள் மாவட்டம் என்போம். இப்படி பேசக்கூடிய நிலைக்கு எங்களை ஆளாக்காதீர்கள்.
கன்னட சகோதரர்களே, நீங்கள் தமிழகத்திற்கு வாருங்கள். உங்களை மதிக்கிறோம். நாம் சகோதரர்களாக இருப்போம்.
நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைபாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கும் மாநிலமாக, மத்திய அரசை மதிக்காத மாநிலமாக, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்காத மாநிலமாக கர்நாடகா இருந்து வருகிறது. இந்த போக்கை அம்மாநில மக்கள் ஆதரிக்கக் கூடாது. கர்நாடக அரசின் செயல்பாடுகள் கண்டனத்திற்குரியது என்றார்.
அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் துவங்கும் நேரத்தில், கர்நாடகாவில் உள்ள அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, அந்தப் பகுதி தங்களுக்கு சொந்தமானது என்றும் கூறி பிரச்னை செய்து வருகின்றன.
பெங்களூருவில் உள்ள தமிழர்கள் மீதும், அவர்களுடைய வர்த்தக நிறுவனங்கள் மீதும் தாக்குதல்கள் நடந்துள்ளன. அங்குள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. குடிப்பதற்குக் கூட தண்ணீர் தர மாட்டோம் என்று கர்நாடகா மறுப்பு தெரிவிப்பது சரியல்ல.
இந்த பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்தி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
காங்கிரஸ் கட்சியின் ஞானசேகரன் பேசுகையில், பெங்களூரில் தமிழ்ப் படங்கள் ஓடும் தியேட்டர்களில் கன்னட அமைப்புகள் தாக்குதல் நடத்தியுள்ளன. தமிழ்ச் சங்க அலுவலகம் மீதும், தமிழர்கள் மீதும் வன்முறை தாக்குதல்களை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
பா.ஜ.,வைச் சேர்ந்த எடியூரப்பா, ஒகேனக்கல் திட்டத்திற்கு இடையூறு செய்து வருகிறார். தமிழர்கள் வாழ்வாதாரத்திற்கு சவால் விடும் வகையில் வாட்டாள் நாகராஜ் போன்றவர்கள் நமக்கு தொந்தரவு கொடுத்து வருகின்றனர் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவிந்தசாமி பேசுகையில், இனவெறியையும், மத வெறியையும் பாஜக தூண்டி விடுவதாக குற்றம் சாட்டினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவபுண்ணியம் பேசுகையில், தமிழகத்தை மிரட்டுகிறது கர்நாடகா. இதில், மத்திய அரசு தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டும். நம்முடைய உணர்வை காட்ட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். எனவே, கர்நாடகாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பந்த் நடத்த வேண்டும் என்றார்.
மதிமுக உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் பேசுகையில், கர்நாடகாவில் சில கட்சிகளும், சில அமைப்புகளும் சேர்ந்து கொண்டு பிரச்னை செய்து வருகின்றன. ஒகேனக்கல் பகுதியில் அத்துமீறி நுழைந்து, அந்தப் பகுதி தங்களுடையது என்று கூறியிருப்பது நாட்டின் இறையாண்மைக்கு வேட்டு வைப்பது போன்றது.
கோவில்களில் புகுந்து அங்கிருந்த ஓடுகளை அகற்றி, செருப்பால் அடித்துள்ளனர். முதல்வர் கொடும்பாவியை எரித்திருப்பது கண்டனத்திற்குரியது. மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தி, இந்த பிரச்னையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். முதல்வர் எடுக்கும் முடிவிற்கு ம.தி.மு.க. தனது முழு ஆதரவைத் தரும் என்றார்.












Click it and Unblock the Notifications