ஓகேனக்கல்-''அப்போது எதிர்க்கவில்லை..இப்போது எதிர்க்கிறோம்''
பெங்களூர்: ஓகேனக்கல் திட்டத்துக்கு எதிராக கர்நாடகத்தி்ல் நடந்து வரும் கலவரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை கர்நாடக ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூர் சந்தித்து விளக்கினார்.
கர்நாடக மாநிலத்தில் தற்போது ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்து வருகிறது. இந் நிலையில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்க கவர்னர் ராமேஷ்வர் தாக்கூர் டெல்லி விரைந்தார்.
அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கர்நாடக நிலவரம் குறித்து விளக்கினார்.
கர்நாடகம் புதிய நிலை!!!:
இதற்கிடையில், பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் சுதாகர் ராவ்,
ஓகேனக்கல் குடிநீர் திட்டத்தை புதிய திட்டமாக கருத வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். கடந்த 1998ம் ஆண்டு இந்த திட்டத்துக்கு கர்நாடக மாநில அரசு சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டாலும், மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீர் பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படாத நிலையில் இந்தத் திட்டம் தொடர்பாக மாநில அரசு புதிய நிலையை மேற்கொண்டுள்ளது என்றார்.
கடந்த 1998ம் ஆண்டில், ஓகேனக்கல் திட்டத்துக்கு கர்நாடக அரசு தரப்பில் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று தமிழக அரசு கூறுவது பற்றி கேட்டபோது,
10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையடுத்து இப்போது எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மத்திய அரசும் ஓகேனக்கல் திட்டத்தை புதிய கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications