காலம்தான் சரியான நீதிதேவன்- ராமதாஸ்
சென்னை: இலவச கலர் டிவி வழங்க ஒதுக்கப்பட்ட நிதியில் பாதியளவு ஒதுக்கியிருந்தால் கூட போதும் தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு குடிநீர் கொண்டு வருவதற்கு. அப்படியிருக்க ஜப்பான் நிதி உதவிக்காக ஏன் காத்திருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஓகேனக்கல் குடிநீர் திட்டம் ஜப்பான் நிதி நிறுவன உதவிக்காக 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு வந்ததாக முதல்வர் கருணாநிதி விளக்கமளித்துள்ளார். சுமார் ரூ.50,000 கோடிக்கு ஆண்டுதோறும் வரவு செலவு செய்யும் மாநில அரசு, தன் சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து ரூ.1,000 கோடி திட்டத்துக்கு நிதி ஒதுக்கி நிறைவேற்ற முடியாதா? ஒரே ஆண்டில் இல்லாவிட்டாலும் இரண்டு மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றி இருக்கலாமே?
இப்போதைய அரசு ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் இலவச கலர் டிவி வழங்க ரூ.750 கோடி வீதம், மாநில அரசின் சொந்த நிதி வருவாயில் இருந்து 3 ஆண்டில் மொத்தம் ரூ.2,250 கோடி ஒதுக்கியுள்ளது. தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு குடிநீர் கொண்டு வர இதில் பாதியளவு நிதியே போதும். அப்படி இருக்கும்போது ஜப்பான் நிதி உதவ வேண்டும் என்று ஏன் காத்திருக்க வேண்டும்?
அனுமதி கிடைத்த 1998ம் ஆண்டே இத்திட்டத்தை நிறைவேற்றி முடித்திருந்தால் இன்றைக்கு இடையூறுகள் ஏற்பட்டிருக்காது. அரசியல் காரணங்களுக்காக அம்மாநில தலைவர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இப்போது எதிர்க்கிறார்கள்.
இப்பிரச்னையில் தமிழகம் ஒன்றுபட்டு ஒட்டுமொத்த எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்திருக்கிறது. ஆனால் கர்நாடகத்தில் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி பதவி ஏற்கும் வரையில் போராட்டத்தை கைவிடுவோம். அமைதி காப்போம் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். அது சரியா? தவறா? என்ற சர்ச்சைக்குள் போக விரும்பவில்லை.
தேர்தல் முடிந்து அங்கு யார் ஆட்சிக்கு வந்தாலும் திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பார்களா? அதற்கு என்ன உத்தரவாதம்? பதவிக்கு வந்ததும் எஸ்.எம்.கிருஷ்ணா போன்றவர்கள் இந்த பிரச்னையை நீதிமன்றத்து எடுத்த செல்ல மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
இதற்கு முன் உச்சநீதிமன்றத்துக்கு போய் பிரச்னைகளை இழுத்தடித்துள்ளாரே. திட்டத்தை நிறைவேற்ற உறுதிமொழி பெறப்பட்டுள்ளதா? இந்த கேள்விகளுக்கெல்லாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். ஏனென்றால் காலம்தான் சரியான நீதிதேவன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications