தமிழக சிறைகளில் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் திரையிட ஏற்பாடு
சென்னை: தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளின் மனமாற்றத்திற்காகவும், அவர்களின் குற்ற உணர்வுகள் அற்றுப் போகவும், எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோர் நடித்த படங்களைத் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் முன்பு போல கொடுமைக் கொத்தளமாக இப்போது இல்லை. அங்கு டிவி பார்க்கும் வசதி உள்ளது, மின்விசிறி வசதி உள்ளது. நாளிதழ்களையும் படித்துப் பார்க்க அனுமதி உண்டு. வாராவாரம் அசைவ சாப்பாட்டுக்கும் இப்போது வசதிகள் உள்ளன.
இதுதவிர, படிக்க விரும்பும் கைதிகளுக்கு அதற்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படுகின்றன. பட்டப்படிப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை சிறைக்குள் இருந்து கொண்டே படித்து முடித்தவர்கள் பலர் உள்ளனர்.
இந்த நிலையில் இன்னொரு வசதியாக திரைப்படங்களைத் திரையிட அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதன்படி எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் நடித்த நல்ல படங்களை கைதிகளுக்கு வீடியோவில் போட்டுக் காட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர், நடித்த படங்கள் பெரும்பாலானவை நல்ல தத்துவங்களையும், போதனைகளையும் கற்பிக்கும் படங்கள். அதேபோல சிவாஜி கணேசன் நடித்த பல படங்களிலும் அன்பு, அமைதி, சத்தியம் உள்ளிட்டவை குறித்த கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. எனவே இவர்கள் இருவரின் படங்களையும் திரையிட முடிவு செய்யப்பட்டது.
படங்களைக் கைதிகளுக்கு காட்டுவதற்கு முன்பு அதில் எந்தெந்த காட்சிகளை கைதிகள் பார்க்கலாம் என்பதை சிறை அதிகாரிகள் குழு பார்த்து எடிட் செய்து வழங்கும். அதன் பின்னர் அப்படங்களை அதிகாரிகள் கைதிகளுக்குப் போட்டுக் காட்டுவர்.
விரைவில் இந்த சினிமா திட்டம் அமலுக்கு வரவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சிறைத்துறை கூடுதல் டிஜிபி சுப்ரமணியம் செய்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications