தர்மபுரியில் எரிக்கப்பட்ட பஸ் கோவை பல்கலை.யில் காட்சிக்கு வைப்பு

கடந்த 2000மாவது ஆண்டு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கி சென்னை தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறையில் இறங்கினர். இந்த வன்முறை தர்மபுரியில் பெரும் அசம்பாவிதமாக மாறியது. தர்மபுரி அருகே சுற்றுலாவுக்கு வந்த கோவை வேளாண் பல்கலைக்கழக பேருந்தை நிறுத்திய அதிமுகவினர் பஸ்சை தீவைத்துக் கொளுத்தினர்.
இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாட்டையே பதை பதைக்க வைத்த இந்த வழக்கு முதலில் தர்மபுரியில் விசாரிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் வழக்கை சேலம் கோர்ட்டுக்கு மாற்றியது.
அங்கு நடந்து வந்த விசாரணையில், 3 அதிமுகவினருக்கு தூக்குத் தண்டனையும், 25 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தர்மபுரியில் 3 மாணவிகளின் உயிரைக் குடித்த பல்கலைக்கழகப் பேருந்து சேலம் கோர்ட்டின் அனுமதியுடன் கோவைக்குக் கொண்டு வரப்பட்டு, பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேருந்தை தினசரி மாணவ, மாணவியர் பார்த்து நடந்து போன கொடுமையின் நினைவுகளை கனத்த இதயத்துடன் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளதால், பஸ்சுக்கு எந்தவித பாதகமும் ஏற்படாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என சேலம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே பஸ்சை பெரிய தார்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த பின்னர் பஸ்சை எந்த வகையில் பராமரிப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
