2 நாளி்ல் 72,237 பிஇ விண்ணப்பங்கள் விற்பனை
சென்னை: பிஇ படிப்புக்கான விண்ணப்பம் விற்பனை தொடங்கிய 2 நாட்களில் 72,237 விண்ணப்பங்கள் விற்று தீர்ந்துள்ளன. மருத்துவத்தை விட இன்ஜினியரிங் கல்வி படிப்பதில் மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.
தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்பில் சேர, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால், விற்பனை துவங்கிய இரண்டு நாட்களில், 72,237 விண்ணப்பங்கள் விற்றுள்ளன. கடந்த ஆண்டுகளைப் போலவே இ.சி.இ., ஐ.டி., மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில், அடிப்படை கட்டமைப்பு பணிகள் நடைபெறுவதால், பி.இ., சிவில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கும் அதிகளவில் வாய்ப்புகள் இருக்கும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் 6 அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1,900 இடங்களும், அரசு உதவி பெறும் 3 இன்ஜினியரிங் கல்லூரிகளில் 2,300 இடங்களும் உள்ளன. மேலும் 263 தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 4,814 இடங்கள் உள்ளன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லூரிகள், தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள், அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்கும் இடங்கள், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும் ஒற்றைச் சாளர கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படவுள்ளன.
இதற்கான, விண்ணப்பங்கள் கடந்த 10ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 58 மையங்களில் இன்ஜினியரிங் படிப்புக்கான விண்ணப்பங்கள் விற்கப்படுகின்றன. விற்பனை தொடங்கிய முதல் நாளே மாநிலம் முழுவதும் 65,734 விண்ணப்பங்கள் விற்கப்பட்டன.
இரண்டாவது நாளாக, நேற்றும் விண்ணப்பங்கள் மாநிலம் முழுவதும் விற்கப்பட்டன. 6,503 மாணவர்கள், ஆர்வத்துடன் விண்ணப்பங்களை வாங்கிச்சென்றனர். மொத்தம் ஒரு லட்சத்து 50,000 விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ள நிலையில், முதல் இரண்டு நாட்களிலேயே 72,237 மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்பிற்கான விண்ணப்பங்களை பெற்றுச் சென்றுள்ளனர்.
மருத்துவப் படிப்பை முடிக்க ஐந்தரை ஆண்டுகள் ஆவதாலும், சம்பள அடிப்படையில், எடுத்த எடுப்பிலேயே அதிக சம்பளம் கிடைக்கும் என்பதாலும் இன்ஜினியரிங் படிப்பில் சேரவே மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண் கடந்த ஆண்டை விட 5 சதவீதம் குறைக்கப் பட்டிருப்பதால், பலரும் இன்ஜினியரிங் படிப்பில் சேரும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.
இ.சி.இ., தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.,) மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளை முடித்தால், முன்னணி நிறுவனங்களில் கைநிறைய சம்பளத்துடன் உடனடியாக வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாணவர்கள் இப்படிப்பை அதிகம் தேர்வு செய்கின்றர். ஆனால், இந்திய பொருளாதாரம் பெருமளவில் வளர்ந்து வருவதால், அடிப்படைக் கட்டமைப்பு வசதிக்கான சிவில் இன்ஜினியர்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்கள் தேவைப்படுகிறார்கள்.
ஆனால், அத்துறைகளுக்கு அதிக கிராக்கி இருப்பதாக தெரியவில்லை. மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் பயோ டெக்னாலஜி போன்ற புதிய துறைகளுக்கு அதிக மவுசு இருக்கும் என்றபோதும், அதில் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டப்படும் என்பது, அட்மிஷன் முடிந்த பிறகுதான் தெரியும்.
விண்ணப்பங்களில் குழப்பம்
பொறியியல் கல்விக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களில் 5 சதவீதத்தை குறைத்து தமிழக அரசு அறிவித்தது. ஆனால் தற்போது விநியோகிக்கப்படும் விண்ணப்பங்களில் இணைக்கப்பட்டுள்ள தகவல் ஏடுகளில் பழைய தகுதிவரம்பே அச்சிட்டிருப்பதால் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இதுபற்றி உயர்கல்வித்துறை உயர்அதிகாரிகளிடம் கேட்டபோது, அரசின் இந்த சலுகை அறிவிப்பு வருவதற்கு முன்பே இந்த விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுவிட்டன. இதனால் மாணவர்கள் வீணாக குழம்ப வேண்டாம். அரசு அறிவித்தபடியே 5 சதவீதம் குறைக்கப்பட்ட குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மாணவர்கள் சேர்க்கை நடக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications