கன்னியாகுமரில் நில அதிர்வு - மக்கள் பீதி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று இரவு நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வெளியே படுத்துத் தூங்கினர்.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று இரவு 8.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இரவு 10.07 மணியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
வீடுகளில் இருந்த பொருட்கள் ஆட்டம் கண்டன, கட்டில்கள் ஆடின, சில பொருட்கள் கீழே விழுந்து உடைந்தன. சில வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். வீடுகளை விட்டு வேகம் வேகமாக வெளியேறி தெருக்களில் கூடி நின்றனர்.
சுனாமி வருமோ என்ற அச்சமும் மக்களிடையே காணப்பட்டது. நில அதிர்வு சில விநாடிகளே நீடித்தது என்றாலும், மக்கள் அச்சம் காரணமாக வீடுகளுக்குள் செல்லாமல் வெளியிலேயே இரவு முழுவதும் தங்கியிருந்தனர்.
நில அதிர்வு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஜோதி நிர்மலா கூறுகையில், இந்த நில அதிர்ச்சி குறித்து விரிவான தகவல்கள் இன்னும் வந்து சேரவில்லை என்றார்.
இந்தோனேசிய நிலநடுக்கத்தின் 'ஆஃப்டர் ஷாக்' தான் நேற்று கன்னியாகுமரியில் உணரப்பட்டதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications