கள்ள சாராயமும் அரசின் கலர் சாராயமும்..ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பவர்களுக்கும், காவல்துறையில் பணியாற்றும் ஒரு சிலருக்கும் இடையே மறைமுக கூட்டணி இருந்து வருகிறது. சடுதியாக உயிரை பறிக்கும் கள்ளச் சாராயம் மட்டுமின்றி, மெல்ல சாகடிக்கும் அரசின் கலர் சாராயமும் ஒழிக்கப்பட வேண்டும். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மதுக்கடைகளை மூடுங்கள்; மதுக் கொடுமையில் இருந்து காப்பாற்றுங்கள் என்று பா.ம.க. தொடர்ந்து இயக்கம் நடத்தி வருகிறது. மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்; கள்ள சாராய சாவுகள் நிகழும் என்றெல்லாம் அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டு வந்திருக்கிறது. மதுக்கடைகளை திறந்தும், கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை, கள்ளசாராய சாவுகளையும் தடுக்க முடியவில்லை என்பதை ஓசூர் கள்ளசாராய சாவுகள் எடுத்து காட்டுகின்றன.

ஓசூர் கள்ளசாராய சம்பவத்தில் 54 பேர் பலியாகி இருக்கிறார்கள்; மேலும் ஏராளமானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் பலருக்கு கண்பார்வை போய்விட்டது என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களுக்கும், காவல்துறையில் பணியாற்றும் ஒரு சிலருக்கும் இடையே மறைமுக கூட்டணி இருந்து வந்துள்ளது. ஓசூரில் மட்டுமல்ல, தமிழகமெங்கும் இந்த மறைமுக கூட்டணியால் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது என்பது உண்மை.

திருவாரூர் மாவட்டத்தில் அண்மைக்காலமாக கள்ளசாராய படுகொலைகள் அதிகரித்திருக்கின்றன.

திருவாரூர் மாவட்டம் கள்ளசாராய படுகொலைகளுக்கு முதலிடம் வகிக்கிறது என்றால், விழுப்புரம் மாவட்டம் கள்ளசாராய விற்பனையில் முதலிடம் வகிக்கிறது என்று சொல்லும் அளவுக்கு அங்கே அனைத்து பகுதிகளிலும் கள்ளச் சாராயத்தை கூவி கூவி விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

கள்ளச் சாராயத்தை ஒழிக்கவும் சாராய சாவுகளை தடுக்கவும், சில்லறை மதுக்கடைகளை அரசே திறந்து நடத்தி வருவதாக கொள்கை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. ஆயினும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை. இதில் இருந்து அரசின் மதுவிலக்கு கொள்கையில் மாற்றம் தேவை என்பதை உணரமுடிகிறது.

கள்ளச் சாராயம் மட்டுமின்றி அனைத்து வகை மதுவும் ஒழிக்கப்பட வேண்டும். வருமானம் வருகிறது என்பதற்காக மதுவிலக்கு கொள்கையில் அரசு தடுமாறவும் கூடாது, தள்ளாடவும் கூடாது.

கள்ளச் சாராயம் அதை அருந்துவோரின் உயிரை உடனடியாக பறித்து விடுகிறது என்றால், நல்ல சாராயம் என்றும் பாதுகாப்பான சாராயம் என்றும் அறிவித்து அரசாங்கம் விற்றுக் கொண்டிருக்கும் கலர் சாராயம் குடிப்போரின் உயிரை மெல்ல மெல்ல பறித்து கொண்டிருக்கிறது.

சடுதியாக உயிரை பறிக்கும் கள்ளச் சாராயம் மட்டுமின்றி, மெல்ல சாகடிக்கும் அரசின் கலர் சாராயமும் ஒழிக்கப்பட வேண்டும். அனைத்து வகை மதுவையும் ஒழித்து மக்களை காக்கவும், வருமான இழப்பை ஈடுகட்டுவதற்கான மாற்று வழிகளை கண்டறியவும் அரசு முன்வர வேண்டும்.

தேவைப்பட்டால் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து விவாதிக்க வேண்டும். இதில் ஒருமித்த கருத்தினை உருவாக்கி மதுவிலக்கை படிப்படியாக செயல்படுத்துவதற்கான முதல் அடியை எடுத்து வைக்க வேன்டும் என்பதைத்தான் ஓசூர் சாராய சாவு பாடம் புகட்டிக் கொண்டிருக்கிறது.

கள்ளச் சாராய சாவில் சரித்திரம் படைத்திருக்கும் ஓசூர் கள்ளச் சாராய நிகழ்வுகள் குறித்தும், அவற்றின் பின்னணி குறித்தும் விசாரித்து அறிய உயர்மட்ட அளவிலான நீதிவிசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும்.

எதையும் குறை கூற வேண்டும் என்பதற்காக, இதையும் கூறுகிறார் என்று குறை சொல்லி அரசு தனக்குள்ள பொறுப்பை தட்டிக் கழிக்க கூடாது.

ஓசூர் கள்ளச்சாராய நிகழ்வில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அரசு தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவதில்லை என்ற பொதுவான நியதியை சுட்டிக்காட்டி அரசு தன் பொறுப்பை தட்டிக்கழிக்க கூடாது. பலியானவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் குறைந்தளவு ரூ.2 லட்சம் அளவுக்காவது நஷ்ட ஈடு வழங்க அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+