பாசனத்துக்காக அணையை உடைத்த விவசாயிகள்!
கரூர்: கரூர் அருகே பாசனத்துக்காக அதிகாரிகள் தண்ணீர் திறந்து விடாததால் கோபமடைந்த விவசாயிகள் தடுப்பணையை உடைத்து சேதப்படுத்தினர்.
கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள ஆத்துப்பாளையம் பகுதியில் ஒரு தடுப்பணை உள்ளது. 10 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்த தடுப்பணையில் இருந்து கரூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பல நூறு ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.
தற்போது இந்த அணையில் கோடை விவசாயத்துக்குப் போதுமானஅளவு தண்ணீர் உள்ளதாக அந்தப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். எனவே அணையில் இருந்து பாசனத்துக்கான தண்ணீரை திறந்து விடக்கோரி அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் இது பற்றி அதிகாரிகள் எந்தமுடிவும் எடுக்கவில்லையாம். இதனால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் நேற்று நள்ளிரவில் ஒன்று திரண்டு அணைக்கு சென்றனர். அணையில் உள்ள ஷட்டர்களை அடித்து உடைத்தனர்.
இதனால் அணையில் இருந்த தண்ணீர் வெளியே சீறிப் பாய்ந்தது. அளவுக்கு அதிகமான தண்ணீர் வெளியேறி அணையை ஒட்டிய பகுதியில் வெள்ளக்காடாக தேங்கி நிற்கிறது.
தகவல் அறிந்து அங்கு விரைந்த பொது பணித்துறை அதிகாரிகள் சேதப்படுத்தப்பட்ட ஷட்டர்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தென்னிலை போலீசார் வழக்கு பதிவு செய்து அணையை உடைத்தவர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications