நடுக் கடலில் தீப்பிடித்தது கப்பல் - கேரள என்ஜீனியர் பலி
சென்னை: இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்த சரக்குக் கப்பலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி கேரளாவைச் சேர்ந்த மெரைன் என்ஜீனியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொழும்பிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு அஸ்வினி என்கிற சரக்குக் கப்பல் கடந்த 23ம் தேதி சென்னைக்குப் புறப்பட்டது. இந்தக் கப்பலில் மும்பையைச் சேர்ந்த இறக்குமதி நிறுவனத்தின் ஊழியர்கள் 28 பேர் இருந்தனர்.
கப்பல் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. நடுக் கடலில் கப்பல் வந்தபோது, பலர் தூங்கிக் கொண்டிருந்தனர். மெக்கானிக்கல் என்ஜீனியர்கள் ஐந்து பேர் கப்பலின் மேல் தளத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் தூங்கினர்.
இந்த நிலையில் அதிகாலையில் கட்டுப்பாட்டு அறையில் திடீரென மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஐந்து என்ஜீனியர்களும் அலறி அடித்து அங்கிருந்து தப்ப முயன்றனர். அப்போது கேரளாவைச் சேர்ந்த பாபு தாமஸ் (41) என்பவர் மட்டும் தீயில் சிக்கிக் கொண்டார்.
இதையடுத்து பிற ஊழியர்கள் பாபுவை மீட்டு அவர் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். கப்பலில் அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. ஆனாலும் தீயில் உடலின் பல பாகங்கள் கருகியதால் பரிதாபமாக உயிரிழந்தார் பாபு.
பின்னர் சென்னைக்கு வந்தபின்னர் கப்பல் கேப்டன் சோட்டாயி துறைமுகம் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார், பாபு தாமஸின் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தனர். பாபுவின் அண்ணன் ஜார்ஜ் தாமஸ் கொச்சியிலிருந்து வந்து பாபுவின் உடலைப் பெற்றுக் கொண்டார்.


Click it and Unblock the Notifications
