கூடங்குளம் அணு மின் நிலையம்-யுரேனியத்திற்கு மிக பலத்த பாதுகாப்பு

கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ரஷ்ய நாட்டு தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் உதவியுடன் கட்டப்பட்டு வரும் இந்த அணு உலைகளுககு அவற்றின் வாழ்நாள் முழுமைக்கும் தேவையான எரிபொருளை அளிக்க ரஷ்யா உறுதியளித்துள்ளது.
முதலாம் அணு உலையின் கட்டுமானப் பணிகள் தற்போது 86 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய பணிகள் விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணு உலையின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தவுடன் இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி மேற்கொள்ளப்படும்.
அதன்பின்னர் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு மின் உற்பத்தி ஆரம்பிக்கும். முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கிய அடுத்த 6 மாத காலத்தில் 2 வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கும்.
முதலாவது அணு உலைக்கு தேவையான யுரேனியம் எரிபொருள் ரஷ்யாவில் இருந்து மும்பை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் 25ம் தேதி திருவனந்தபுரம் வந்து சேர்ந்தது.
பின்னர் தனி வாகனம் மூலம் கூடங்குளத்திற்கு யுரேனியம் வந்து சேர்ந்தது. கூடங்குளம் அணு மின் திட்ட வாளகத்தில் பிரத்யேக எரிபொருள் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த யுரேனியம் எரிபொருளில் கதிர்வீச்சு எதுவும் இருக்காது, அதை எரியூட்டும் போதுதான் கதிர்வீச்சு ஏற்படுமாம்.
யுரேனியம் வைக்கப்பட்டுள்ளதால் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரவு-பகலில் பார்க்க உதவும் பைனாக்குலர்களுடன் நவீன துப்பாக்கிகள் தாங்கிய மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினர் இரவும், பகலும் மிக பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அணு உலைக்குச் செல்லும் பாதையில் புதிய தடுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மத்திய உளவுப் பிரிவினரும் அந்தப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
யுரேனியம் வைக்கப்பட்டுள்ள அறையைச் சுற்றிலும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications