தமிழக அரசு வரியை குறைக்க வேண்டும்: ஜெ-ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு பெட்ரோலியப் பொருட்களின் மீதான விற்பனை வரியைக் குறைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாகவும், நிர்வாக திறமையின்மை காரணமாகவும் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும், கட்டுமானப் பொருட்களின் விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே இருக்கின்றன.

இதன் விளைவாக நாட்டின் பண வீக்கம் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து கொண்டு வருகிறது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு 50 ரூபாயும் உயர்த்தி அனைத்து தரப்பு மக்களையும் வாழ்க்கையின் விளிம்பிற்கே தள்ளி இருக்கிறது.

மத்திய அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைக்கு முதலில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டு காலம் முடிவடைந்த நிலையில், தற்போதைய உயர்வையும் சேர்த்து இதுவரை 8 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது.

டீசல் என்பது வெறும் எண்ணெய் மட்டுமல்ல; அதுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான அச்சாணி. டீசல் விலை உயர்ந்தால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படும். எல்லா வகை பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாவதுடன், டீசல் பம்ப் செட்டுகளை பயன்படுத்தும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

உள்நாட்டு எரிபொருட்களின் விலையை உயர்த்தும்போதெல்லாம் மத்திய அரசு உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் என்ற வாதத்தை அடிக்கடி தொடர்ந்து கூறி, விலையேற்றத்திற்கான காரணத்தை நியாயப்படுத்தி வருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனெனில், நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவைகளும் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதில்லை. உள் நாட்டிலேயே பெறப்படும் கச்சா எண்ணெய்க்கும் சர்வதேச சந்தை விலையை நிர்ணயிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள 5 விழுக்காடு சுங்க வரி குறைப்பின் மூலம் பொதுமக்களுக்கு எந்தவித பயனும் இல்லை.

ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படாவிட்டாலும், மண்ணெண்ணெய் விநியோகம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு மண்ணெண்ணெய் விநியோகத்தை அதிகப்படுத்த வேண்டும்.

பெட்ரோலியப் பொருட்களின் தற்போதைய விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்கும் வகையில் தமிழக அரசு பெட்ரோலியப் பொருட்களின் மீதான விற்பனை வரியைக் குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

வரியை தமிழகம் குறைக்க வேண்டும்-ராமதாஸ்:

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை உயரப் போகிறது என்பது முன் கூட்டியே தெரிந்தது தான். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்ந்து கொண்டு வந்ததே இதற்கு காரணம். கச்சா எண்ணை விலை உயர்வால் ஏற்பட்டுள்ள சுமையை மாற்று வழிமுறைகளை மேற்கொண்டு சமாளிக்கவும், அதன்மூலம் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை தவிர்க்கவும் வழியில்லை என்கிற நிலைமையில் தான் மத்திய அரசும் பெரும் தயக்கத்திற்கிடையே விலை உயர்வை அறிவித்து இருக்கிறது.

அதே நேரத்தில், சாதாரண மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணையின் விலையை உயர்த்தவில்லை. இது ஆறுதல் அளிக்கிறது. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தி இருப்பது நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கும். எனவே சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கச்சா எண்ணையின் விலை உயர்வு ஒரு பக்கம் இருந்தாலும் பெட்ரோலியப் பொருட்களின் விலையில் மத்திய, மாநில அரசுகளின் வரிவிதிப்புகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான சுங்கவரியில் 2.5 சதவீதம் குறைத்திருக்கிறது. அதே போல மாநில அரசும் தன் பங்கிற்கு பெட்ரோலியப் பொருட்கள் மீதான விற்பனை வரியைக் கணிசமாக குறைத்து மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமையை மேலும் குறைக்க முன்வர வேண்டும்.

தமிழகத்தில் பெட்ரோல் மீது 30 சதவீதமும், டீசல் 25 சதவீதமும், விற்பனைவரி விதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான விற்பனை வரி அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்றும் கூறப்படுகிறது.

வைகோ ஆர்ப்பாட்டம்:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில்,

நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் விதத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், பெட்ரோலியப் பொருட்களின் மீது விற்பனை வரியை முழுமையாக ரத்து செய்ய முன் வராத மாநில அரசைக் கண்டித்தும் மதிமுக சார்பில் தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் வரும் 10ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

சென்னையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட் டத்தில் நானும், கோவை மாநகரில் கழகப் பொருளாளர் மு. கண்ணப்பனும், நெல்லை மாநகரில் துணைப் பொதுச் செயலாளர் நாசரேத் துரையும், மதுரை மாநகரில் துணைப் பொதுச் செயலாளர் சத்யாவும் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+