Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயன் கொலையில் முக்கிய துப்பு கிடைத்தது: போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்ஜிஆரின் உறவினர் விஜயன் கொலை தொடர்பாக முக்கிய துப்பு கிடைத்துள்ளதாகவும், விரைவில் கொலையாளிகள் சிக்குவார்கள் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

எம்ஜிஆருக்கு கோடிக்கணக்கில் சொத்து உள்ளன. இந்த சொத்துக்களை ஏழை, எளியவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் யாரும் சுயலாபம் அடையக் கூடாது என்றும் அவர் உயில் எழுதி வைத்துள்ளார்.

இந்த சொத்துக்களை எம்ஜிஆரின் மனைவி ஜானகியின் உறவினர்கள் நிர்வகித்து வருகின்றனர். இதில் அவர்களுக்குள் கடும் போட்டி நிலவி வருகிறது.

ஜானகியின் தம்பி நாராயணனின் மகள்களான சுதா (கணவர் விஜயன்), லதா (கணவர் ராஜேந்திரன்) ஆகியோர் இடையே போட்டி கடுமையாக இருந்து வந்தது.

இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் தான் விஜயன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலையையடுத்து அபிராமபுரம் போலீசில் விஜயனின் மனைவி சுதா கொடுத்த புகாரில் தனது குடும்பத்தினருக்கும் தனது சகோதரி லதாவின் குடும்பத்துக்கும் சொத்து பிரச்சனை இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சொத்து தொடர்பாகவே இந்தக் கொலை நடந்துள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சுதாவின் சகோதரி லதா, கணவர் ராஜேந்திரன், மகன் குமார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

முக்கிய துப்பு கிடைத்தது

இதற்கிடையே, கொலை வழக்கில் முக்கிய துப்பு கிடைத்துள்ளது என்றும் விரைவில் கொலையாளிகள் சிக்குவார்கள் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மயிலாப்பூர் துணை ஆணையர் ஏ.ஜி.மெளர்யா கூறுகையில், கொலையாளிகள் குறித்த துப்பு கிடைத்துள்ளது. அவர்களை நாங்கள் நெருங்கி விட்டோம். விரைவில் கொலையாளிகள் பிடிபடுவார்கள் என்றார்.

இதற்கிடையே, இந்தக் கொலை மிகவும் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பயங்கர கும்பல்தான் இந்தக் கொலையில் ஈடுபட்டிருப்பதாகவும் போலீஸார் கூறுகிறார்கள்.

கொலை செய்யும் இடத்தை தேர்வு செய்தது முதல் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் வரை பார்க்கும்போது, கொலைசெய்வதில் கை தேர்ந்த, எதற்கும் அஞ்சாத கும்பல்தான் இதில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தெளிவாக தெரிவதாக போலீஸார் கூறுகிறார்கள்.

விஜயனைக் கொல்ல வந்த கும்பல், கோட்டூர்புரம் பாலத்தில் ஒரு காரை தயாராக நிறுத்தி வைத்திருந்தது. விஜயன் கார் வந்ததும், அந்தக் காரை பின் தொடர்ந்து வந்து குறிப்பிட்ட இடத்தில் மோதியுள்ளனர். காரை மோதி நிறுத்திய பின்னர் தங்களது வேலையை முடித்துக் கொண்டு பறந்து விட்டனர்.

காரில் இருந்த பதிவு எண், சென்னை பதிவு எண் ஆகும். ஆனால் அந்த நம்பர் பிளேட் போலியானது என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுவரை வழக்கு தொடர்பாக 100க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

கைதா?

இந் நிலையில், லதா, ராஜேந்திரன், குமார் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், தாங்கள் ஜூன் 4ம் தேதி கைது செய்யப்பட்டோம்.

எங்கள் மீதான புகார் பொய்யானது. உள்நோக்கம் கொண்டது. எங்களுக்கும் இந்தக் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளனர்.

இதுகுறித்து லதா குடும்பத்தினரின் வக்கீல் கூறுகையில், மூன்று பேரும் ஜூன் 4ம் தேதி முதல் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்களை எந்த நீதிமன்றத்திலும் போலீஸார் ஆஜர்படுத்தாமல் உள்ளனர். எனவேதான் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் லதா, ராஜேந்திரன், குமார் ஆகியோர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, லதா, ராஜேந்திரன், குமார் ஆகியோரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் கொலை நடந்த சமயத்திலும், அதற்கு முன்பும், பின்பும், யார் யாரெல்லாம் பேசினார்கள் என்பது குறித்து போலீஸார் ஆராய்ந்து வருகிறார்கள்.

மருத்துவமனையில் அனுமதி:

இந் நிலையில் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோதே அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துமனையி்ல் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அதே போல அவரது தந்தை ராஜேந்திரனும் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+