இது நாடா அல்லது காடா?-அரசு மீது ராமதாஸ் கடும் தாக்கு
சென்னை: அரசின் உத்தரவையும் மீறி கல்லூரிகள் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக முதல்வர் கருணாநிதியே கூறியிருப்பது எந்த வகையில் நியாயம்?. அப்படியானால் இது நாடா அல்லது காடா என்று மக்கள் எண்ண மாட்டார்களா? என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடுக்கான கல்வி கட்டணம் 2 மடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுவும் போதாது என்று கல்லூரிகளின் அமைப்பின் சார்பில் தெரிவித்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு அரசு அறிவித்த கட்டணத்தை மதிக்காதவர்கள், அரசின் அறிவுரையைக் குப்பைக் கூடையில் வீசிவிட்டு அவரவர் தகுதிக்கேற்ப லட்சக்கணக்கில் வசூலித்தவர்கள், புதிதாக அரசு அறிவித்துள்ள கட்டணமும் போதாது என்றும், அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் அறிவித்துக் கொண்டிருப்பவர்கள், இப்போது அரசு அறிவித்திருக்கும் கட்டணத்திற்கு மேல் இந்த ஆண்டிலும் வசூலிக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?.
அப்படி வசூலிக்கமாட்டார்கள் என்று அரசு எப்படி நம்புகிறது?. இந்த ஆண்டும் அவரவர் தகுதிக்கேற்ப லட்சக்கணக்கில் வசூலித்தால் அவர்கள் வசூலிக்கும் கட்டணத்தையே பின்னர் அதிகாரப்பூர்வ கட்டணமாக அறிவிக்க அரசு முன் வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்?.
இந்த பிரச்சினை பற்றி தோழமைக் கட்சி தலைவர்களுடன் கலந்து பேசவில்லை. தோழமை கட்சிகளின் சட்டப்பேரவை பிரதிநிதிகளை அழைத்து பேசப்பட்டிருக்கிறது. இதை நான் மறைக்கவில்லை
ஆனால், இந்த கலந்தாய்வுகளில் கட்டணத்தை 2 மடங்காக உயர்த்தி கொள்ள அனுமதிக்கலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சி பிரதிநிதிகளோ அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளின் பிரதிநிதிகளோ ஒப்புதல் வழங்கவில்லை.
அத்தகைய நிலையில், தோழமை கட்சித்தலைவர்களை அழைத்து பேசியிருக்க வேண்டும். அது தலைமை செயலகமா? அல்லது அறிவாலயமா? என்பது பிரச்சினை அல்ல. கொள்கை முடிவுகளை தோழமை கட்சித் தலைவர்களை கலந்து பேசி மேற்கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டுவதில் எந்த உள்நோக்கமும் இல்லை.
கல்வி வியாபாரமாகி விடக்கூடாது என்பது அரசின் குறிக்கோள் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது.
அதே நேரத்தில் கல்வியை வியாபாரமாக்கி கொண்டிருப்பவர்களுக்கு துணைபோகும் அளவுக்கு அரசின் நடவடிக்கைகள் அமைந்துவிடக் கூடாது என்பதும் முக்கியம். இதுதான் தோழமை கட்சிகளின் நோக்கம்.
ஒவ்வொரு கோப்பிலும் கையெழுத்திடும்போதும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியமாகும் என முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளது நியாயமானது. ஆனால் பொறியியல் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு கட்டணம் என்பது கோப்பில் கையெழுத்திடும் பிரச்சனை அல்ல. அது ஒரு கொள்கை முடிவு.
அரசின் உத்தரவையும் மீறி கல்லூரிகள் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக முதல்வர் கருணாநிதியே கூறியிருப்பது எந்த வகையில் நியாயம். அப்படியானால் இது நாடா அல்லது காடா என்று மக்கள் எண்ண மாட்டார்களா?.
அதற்காகத்தான் கல்வியை வியாபாரமாக்கி கொண்டிருக்கும் கல்லூரிகளுக்கு சாதகமான கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.
இப்படியெல்லாம் சுட்டிக் காட்டினால் குறை கூற வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறார் என்று எடுத்துக் கொண்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்?.
அரசுக்கு உதவிடும் வகையில் ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் யோசனைகளையும் ராமதாஸ் கூறி வருகிறார் என்று முன்பு சொன்ன முதல்வர், இப்போது என்ன காரணத்தினாலோ எதையும் குறை கூறுவதாக எடு்த்துக் கொள்கிறார்.
இவ்வாறு கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications