டெல்லியில் பேச்சு-நெய்வேலியில் 2500 பேர் கைது
டெல்லி: நெய்வேலி அனல் மின் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக இன்று டெல்லியில் மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
என்எல்சியில் பணியாற்றும் 13,000 ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 13 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டம் காரணமாக என்.எல்.சியில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்தம்பிக்கும் நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது.
13வது நாளாக நடக்கும் இந்தப் போராட்டத்தால் நிலக்கரி வெட்டி எடுப்பது பெருமளவில் தடைபட்டு மின் உற்பத்தி 600 மெகா வாட்டாக குறைந்துவிட்டது. இங்கு தினமும் 2,490 மெகா வாட் உற்பத்தியாவது வழக்கம்.
வழக்கமாக தினமும் 35,000 டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் நிலையில், கடந்த 12 நாட்களாக தினமும் 5,000 டன்னுக்கும் குறைவாகவே நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது.
இப்பிரச்சினையில் தலையிட்டு சுமூகத் தீர்வு காண முயலுமாறு பிரதமருக்கு, கோரிக்கை விடுத்து முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார். இதையத் தொடர்ந்து மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் சந்தோஷ் பொகார்டியா இன்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதில் சிஐடியு, தொமுச, பாட்டாளி தொழிற்சங்கம், எல்எல்எப், யூடியூசி, ஏஐடியுசி உள்ளிட்ட சங்கங்களின் பிரநிதிகள் பங்கேற்கின்றனர்.
சிஐடியு சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், சிஐடியு அகில இந்திய துணைத் தலைவருமான டி.கே. ரங்கராஜன் பங்கேற்கிறார்.
2,500 தொழிலாளர்கள்-குடும்பத்தினர் கைது
டெல்லியில் பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடந்தாலும் இன்று முதல் போராட்டத்தை ஒப்பந்ததத் தொழிலாளர்கள் தீவிரப்படுத்தினர். என்.எல்.சி தலைமை அலுவலகத்தை தங்கள் குடும்பத்தினர், குழந்தைகளுடன் முற்றுகையிட்டனர்.
இதையடுத்து 2,500 ஒப்பந்தத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர். இதில் 800 பெண்களும் அடங்குவர்.
டெல்லி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அடுத்த கட்டமாக 16ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து என்.எல்.சியில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications