ஒரு சிலிண்டர் வைத்திருப்போருக்கு கேஸ் விலை ரூ. 30 குறைப்பு: கருணாநிதி

கடலூரில் திமுக மகளிர் அணி முதலாவது மாநில மாநாட்டில், முதல்வர் கருணாநிதி நிறைவுரையாற்றினார்.
அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் இந்த இயக்கத்தினுடைய ஆட்சி, அண்ணா உருவாக்கிய ஆட்சி. அவரால் விதை ஊன்றப்பட்ட ஆட்சியின் தொடர்ச்சியாக இன்று நாம் நடத்துகின்ற இந்த நிர்வாகத்தில், இந்தியாவில் என்றும் இல்லாத அளவுக்கு ஆங்காங்கே வேலை இல்லாத திண்டாட்டம், விலைவாசி உயர்வு என்றெல்லாம் பேசப்பட்டாலும் கூட, தமிழ்நாட்டில் ஒரு கோடியே 80 லட்சத்து 300 குடும்பங்களில தரமான அரிசி கிலோ 2 ரூபாய்க்கு வழங்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு என்கிறபோது விலைவாசி என்ன செய்யும்.
அதைப் போல 1444 கோடி ரூபாய் செலவில் 59 லட்சத்து 55 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச கலர் டிவி வழங்க அனுமதி கொடுக்கப்பட்டு 36 லட்சத்து 74 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச டிவி வழங்கப்பட்டிருககிறது.
2 ஆண்டுகளில் 11 லட்சம் ஏழைப் பெண்களுக்கு 220 கோடி ரூபாய் செலவில் இலவச எரிவாயு அடுப்புகள், இலவச எரிவாயு இணைப்புடன் வழங்கப்பட்டிருக்கின்றன. நடப்பு ஆண்டில் மேலும் 8 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 104 கோடி செலவில் வழங்கப்படவுள்ளன.
1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் தர்மபுரியில் ஒரே ஒரு மகளிர் சுய உதவிக் குழு தொடங்கப்பட்டது. இப்போது 3 லட்சத்து 54 ஆயிரத்து 148 சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இதில் 57 லட்சத்து 66 ஆயிரத்து 743 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இன்று வரை 59 ஆயிரத்து 83 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு 8 லட்சத்து ஒரு ஆயிரம் பெண்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் பயிற்சிக்கான உதவித் தொகை அம்மா ஆட்சியில் ரூ. 7.50 ஆக இருந்ததை நாம் ரூ. 45 ஆக உயர்த்தியிருக்கிறோம். சிறந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்குகிறோம்.
மாநாட்டைக் கூட்டினோம், அரசியலைப் பற்றி, நாட்டில்உள்ள விலைவாசி பற்றி பேசினோம் என்றில்லாமல் நமது பண்பாட்டை காப்பாற்றவும், அதனை புதுப்பிக்கவும் இன்றைக்கு சூளுரை மேற்கொண்டோம் என்றால், இந்த மகளிர் மாநாட்டின் பயனை நாம் முழுமையாக நிறைவேற்றினோம் என்று பொருள்.
சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும் என்று இந்த மாநாட்டில் தீர்மானம் போட்டிருக்கிறீர்கள். மகளிர் மாநாடு முடிவடைந்ததையொட்டியும், இந்த தீர்மானத்தையொட்டியும், தமிழ்நாட்டில் உள்ள ஒரு கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்திருக்கும் 50 லட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு ஒரு சிலிண்டருக்கு ரூ.30யை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும். மத்திய பொதுத்துறை எண்ணெய் கம்பெனிகளுக்கு அந்தத் தொகையை நேரடியாக வழங்கும்.
இதன் மூலம் 50 லட்சம் ஏழை எளிய குடும்பத்தினர் இனி ஒரு சிலிண்டருக்கு ரூ. 50க்குப் பதிலாக ரூ. 20 கொடுத்தால் போதும். அரசுக்கு இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 100 கோடி கூடுதல் செலவாகும். இந்த மாநாட்டை நடத்திய மகளிரால் இந்த அரசுக்கு ரூ. 100 கோடி இழப்பு.
அண்ணாவுக்கு இது நூற்றாண்டு விழா, பொங்கல் விழா தமிழன் விழா என்றால், அண்ணா நூற்றாண்டு, திராவிட விழா. அதனை சிறப்பாகக் கொண்டாட இன்றைக்கே ஏற்பாடு செய்யுங்கள் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications