ஆரம்பமாகிறது 'அஞ்சா நெஞ்சன்' அத்தியாயம்!

அழகிரி ஒரு இடத்துக்கு அல்லது விழாவுக்கு வருகிறார் என்றாலே அவருக்களிக்கப்படும் மரியாதையின் ரேஞ்சே வேறு. முன்பு மதுரை மற்றும் அதற்கு தெற்கே மட்டுமே இருந்த அழகிரியின் ராஜ்யம் இப்போது தடாலடியாக சென்னை வரை வியாபித்து நிற்கிறது.
கல்யாணம், நூல் வெளியீட்டு விழா, திரைப்பட பூஜைகள் என சகல நிகழ்வுகளுக்கும் தவறாமல் குடும்பத்துடன் ஆஜராகிறார் அழகிரி.
அதிகாரிகள் பலரும் ஒரு கேபினட் அமைச்சருக்குத் தரும் அத்தனை மரியாதைகளையும் அழகிரிக்குத் தருவதையும் பார்க்க முடிகிறது.
சமீபத்தில் சென்னையில் ராஜ் டிவியின் புதிய செய்திச் சேனல் ராஜ் நியூஸ் துவக்க விழாவில் அழகிரியின் வருகையும், அவரை ராஜ் டிவி அதிபர் மற்றும் இயக்குனர்கள் வரவேற்ற விதமும், அந்த நிகழ்ச்சியை விட சுவாரஸ்யமானதாக இருந்தன.
இதற்குக் காரணம், அழகிரி வைத்திருக்கும் எதிர்கால திட்டங்கள்.
சன்னுக்குப் போட்டியாக கேபிள் நெட்வொர்க்கில் முழு வீச்சில் இறங்கியிருக்கும் அழகிரி, விரைவிலேயே ராஜ் டிவி மூலமாக தனியாக டி.டி.எச். சாதனங்களை வழங்கும் திட்டத்திலும் காலடி எடுத்து வைக்க உள்ளாராம்.
கேபிள் நெட்வொர்க் அமைப்பதில் ஆரம்பத்தில் ஏற்பட்ட பின்னடைவைப் போல இம்முறை ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார் அழகிரி. எனவே ஆரம்பத்திலேயே தனது டிடிஎச் சேவைக்குள் குறிப்பிட்ட முக்கியச் சேனல்கள் அனைத்தையும் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
கலைஞர் டிவியை முதலில் ராஜ் டிவிதான் தொடங்குவதாகக் கூறி வந்தார்கள். ஆனால் கலைஞர் நெட்வொர்க் தனியாகவே துவங்கி பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது. இதில் ராஜ் டிவிக்கு ஏமாற்றம்தான் என்றாலும், ஆளும் கட்சியுடன் நிற்பதில் உள்ள அனுகூலங்கள் அவர்களை அமைதியாக்கிவிட்டது.
இம்முறை அவர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்காமல், டிடிஎச் சேவை வழங்குவதை முழுவதுமாக ராஜ் டிவிக்கே வழங்கும் திட்டத்திலிருக்கிறாராம் அழகிரி.
கட்சியிலும்...
இன்னொரு பக்கம், கட்சிக்குள் அழகிரியின் கை ஒங்கி வருவதும் வெளிப்படையாகவே தெரிகிறது.
முன்பெல்லாம் கட்சியின் போஸ்டர்களை முதல்வர் கருணாநிதி, அமைச்சர் ஸ்டாலின் படங்கள் மட்டுமே அலங்கரிக்கும். இப்போது கூடுதலாக அழகிரியின் படங்களும் தவறாமல் இடம்பெறத் தொடங்கிவிட்டன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுகவின் முக்கியத் தலைவரும் அமைச்சருமான பிரமுகர் இப்படிக் கூறுகிறார்:
"அவர் என்ன சினிமா வில்லனா... எதற்காக இந்த அளவு அவரை வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள்... திமுகவும் அவரும் பிரித்துப் பார்க்க முடியாத விஷயங்கள். ஒரு கட்சிக்குத் தலைமை ஏற்கிற பக்குவமும், தகுதியும் அவருக்கு நிறைய உண்டு. நடக்கப் போகும் அதிசய மாறுதல்களை பார்க்கத்தானே போகிறீர்கள்... இவரா இப்படி என மூக்கின் மீது விரலை வைப்பீர்கள். அத்தனை திட்டங்களை வைத்திருக்கிறார் அழகிரி. எல்லாமே கட்சியின் நன்மைக்குத்தான்" என்றார் அவர்.
அட...


Click it and Unblock the Notifications
