டாக்டர் பணியிடம் காலியில்லை: ஜெ.வுக்கு அரசு பதில்!
சென்னை: சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஒரு டாக்டர் பணியிடம் கூட காலியில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தமிழக அரசு பதிலளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னையில் செயல்படும் அரசு பொது மருத்துவமனையில் போதிய பணியாளர்கள் இல்லாமல் சுகாதாரக் கேடு உள்ளது எனவும் மருத்துவர்களுக்கு பதிலாக செவிலியர்கள் மருத்துவம் செய்யும் அவலநிலை உள்ளது என்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசு பொது மருத்துவமனையில் 409 நிரந்தர பணியாளர்களும், இரண்டு ஒப்பந்தக்காரர்கள் நியமித்த 220 ஊழியர்களும் பணிபுரிந்து சுகாதாரப்பணிகளை செவ்வனே செய்கின்றனர். அறிக்கையில் உள்ளது போல எங்கும் சுகாதாரக் கேடு இல்லை.
மேலும் அரசு பொது மருத்துவமனையில் அனைத்து மருத்துவர் பணியிடங்களும் நிரப்பப்பட்டு நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை வழங்கப்படுகிறது. ஒரு மருத்துவர் பணியிடம் கூட காலி இல்லை. மருத்துவமனையில் உள்ள அனைத்து மருத்துவக் கருவிகளும் நல்ல முறையில் இயங்கி வருகின்றன.
அனைத்து வகை உயிர்காக்கும் மருந்துகளும் போதிய அளவில் இருப்பில் உள்ளன. நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகளை மருந்தாளுநர்கள் தான் வழங்கி வருகின்றனர். மொத்தம் உள்ள 32 மின்தூக்கிகளில் 28 மின்தூக்கிகள் செயல்பட்டுக் கொண்டுள்ளன. 4 மின்தூக்கிகள் பராமரிப்பில் உள்ளன. இவைகளும் ஓரிரு தினங்களில் சரி செய்யப்பட்டு நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் கடந்த ஆட்சியில் காலியாக வைக்கப்பட்ட பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு மக்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது ஏற்படும் குறைகளை அவ்வப்போது களைய நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் மத்திய அரசும் பிற மாநிலத்தவர்களும் பாராட்டும் வகையில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தது ஆகும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
