நீங்கள் அலுவலகத்தில் தூங்குவீர்களா.. 'தப்பில்லை'!
-அறிவழகன்
நேற்று ஒரு வித்தியாசமான தினம் கொண்டாடப்பட்டது. பெயர் 'சியஸ்டா டே'. அதாவது உலக 'குட்டி' தூக்க தினம். சியஸ்டா என்றால் லத்தீன் மொழியில் குட்டி தூக்கம் என்று பொருள். (nap என்போமே அதே தான்)
சரியாக சொன்னால் லத்தீனில், 'ஹோரா செக்ஸ்டா'. அதுவே சியஸ்டா என மாறிவிட்டது. சியஸ்டா என்பதற்கு ஆறாவது மணி என்றும் பொருள் வருமாம். அதாவது, சூரிய உதயத்திலிருந்து 6வது மணி நேரத்தில் தூக்கம் பொதுவாக எல்லோருக்கும் வருமாம்.
நம் ஊரில் இதை பகல் தூக்கம் என்போம். 'பகல்லேயே தூங்குறியா.. வெளங்கும்' என்று நம் தூக்கத்தைப் பார்த்து 'பொறாமையோடு' பொறுமுவார்களே.. அதே தான்.
பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நாடுகளில், உடல் வேகமாய் சோர்வடையும். அந்த சமயத்தில் சின்னதாக குட்டித் தூக்கம் போடுவது நல்லதே என்கிறார்கள் மருத்துவர்கள்.
குறிப்பாக அலுவலக வேலை பார்ப்போர் மத்தியில்தான் இந்த குட்டித் தூக்கம் ரொம்ப பிரபலம்.
அப்படியே டமார் என டேபிளில் சாய்ந்தோ அல்லது இருக்கையில் பின்னாடி சாய்ந்தபடியோ.. குட்டியாக ஒரு தூக்கத்தைப் போடுவதை அலுவலகங்களில் சகஜமாக காணலாம்.
சிலர் கம்ப்யூட்டர் மானிட்டரை 'முறைத்தபடியே' தூங்குவார்கள்.. பார்ட்டி எதையோ சீரியசாக பார்த்துக் கொண்டிருப்பது மாதிரி இருக்கும். விழியும் கூட திறந்திருக்கும்.. ஆனால் வேறு ஏதோ உலகத்தில் இருப்பார். தூக்கத்திலேயே தடாரென மானிட்டர் மீது மோதிவிட்டு, முழித்து.. 'பாஸ்' பார்க்கிறாரா என்று பார்த்துவிட்டு, மீண்டும் மானிட்டரை பார்த்த மாதிரியே தூக்கத்தை கன்டின்யூ செய்வதெல்லாம் சகஜம் தான்.
இந்த 'சடார்' தூக்கத்துக்கு பேர் போனவர்களில் முக்கியமானவர் முன்னாள் பிரதமர் தேவெ கெளடா. ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்திருந்தாலும் அப்படியே 'கண்ணசருவார்'. கெளடாவின் தூக்க போஸ்கள் இடம் பெறாத இந்திய பத்திரிக்கைகளே இருக்க முடியாது.
உலகையே நடுநடுங்க வைத்த மாவீரன் நெப்போலியனும் குட்டித் தூக்கத்திற்கு பெயர் போனவர். ஆனால், அவர் நெடுந் தூக்கம் போட்டதே இல்லையாம். போர்களின் போது கிடைக்கிற கேப்பில் குட்டித் தூக்கம் போடுவதோடு சரி. குதிரையில் போய்க் கொண்டே பட்டென தூங்கி விழித்துவிடுவாராம்.
அதே போல வின்ஸ்டன் சர்ச்சிலும் குட்டித் தூக்கப் பிரியர். பேசிக்கொண்டிருக்கும்போதே, டக்கென கண்களை மூடி விடுவார்.
ஐன்ஸ்டீனுக்கு குட்டித் தூக்கம் போடாவிட்டால் டென்ஷனாகி விடுமாம்.
மார்க்கரெட் தாட்சர், தான் மட்டும் தூங்காமல் தன்னைச் சுற்றி இருப்பவர்ளையும் கொஞ்ச நேரம் தூங்கி விட்டு வேலையைப் பாருங்கள் என்பாராம்.
குட்டித் தூக்கம் என்பது ஜோக்காகிப் போய்விட்டாலும் அதன் பலன்கள் மிக அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். குட்டித் தூக்கத்துக்குப் பின் வேலை படு சுறுசுறுப்பாகிறது என்பது நிபுணர்களின் கூற்று.
இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், 10 முதல் 20 நிமிடம் வரை தூங்கும்போது, 30 சதவீதத்திற்கும் மேலாக ஒருவரின் உழைக்கும் தன்மை அதிகரிப்பது தெரியவந்துள்ளது.
விழிப்புணர்ச்சியும் 100 சதவீதம் அதிகரிக்கிறதாம். திறனும் கூர்மையாகிறதாம்.
ஜப்பானில் சில நிறுவனங்களில் வேலை பார்ப்போருக்கு ஒரு தலையணையும், தூங்குவதற்காக அறையும் ஒதுக்கிக் கொடுக்கிறார்கள். வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது தூக்கம் வந்தால், தலையணையுடன் அந்த அறைக்குப் போய் குட்டித்தூக்கம் போட்டு ரெஃப்ரஷ் செய்து கொள்ளள அனுமதி அளிக்கின்றனர்.
ஐரோப்பாவில் தொழில் புரட்சி வருவதற்கு முன்பு வரை இந்த குட்டித் தூக்கம் படு சகஜமாக இருந்தது. ஆனால் தொழில் புரட்சி ஏற்பட்ட பின்னர் குட்டித் தூக்கம் போடுவோரின் எண்ணிக்கை குறைந்து விட்டதாம்.
அலுவலகங்களில் குட்டித் தூக்கம் போடுவோருககு ஆதரவாக ஒரு அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பை நிறுவியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த நோயல் கிங்ஸ்லி. கடந்த 15 வருடங்களாக இவர் தொடர்ந்து குட்டித் தூக்கம் போட்டு வருகிறாராம். அலுவலகத்திற்குப் போய் வேலை பார்க்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே இவருக்கு தூக்கம் வந்து விடுமாம்.
எது எதற்கோ, அந்த டே இந்த டே என்று கொண்டாடுகிறோம். அதேபோல குட்டித் தூக்கத்திற்கும் ஒரு தினத்தை கொண்டாட வேண்டும் என்று இவர் நினைத்ததனால் உருவானதுதான் இந்த சியஸ்டா டே.
கடந்த இரு வருடங்களாக ஜூன் 25ம் தேதியை தேசிய குட்டி தூக்க தினமாக கொண்டாடி வருகிறார் கிங்ஸ்லி. இதற்கு உலகம் முழுவதும் தற்போது வரவேற்பும் கிடைக்க ஆரம்பித்துவிட்டது தான் முக்கியமான விஷயம்.
குட்டித் தூக்கத்தை வலியுறுத்தி பல புத்தகங்களும் வந்துவிட்டன. ஒரு இயக்கமும் கூட ஆரம்பிக்கப்பட்டுவிட்டது தான் லேட்டஸ்ட் தகவல்.
Siesta Day என்று சர்ச் என்ஜின்களில் போட்டு மெளஸை ஒரு தட்டி தட்டிப் பாருங்கள்.. இதை என்னமாய் கொண்டாடுகிறார்கள் என்று...
என்ன, கொட்டாவி வருதா?












Click it and Unblock the Notifications