பெட்ரோல்-டீசல் 'விர்ர்': சைக்கிளுக்கு மாறும் பொது ஜனம்!

Subscribe to Oneindia Tamil

Cycle
சென்னை: பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதாலும், சாதாரண பெட்ரோல், டீசல் விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டதாலும், அப்பாவி பொது ஜனங்கள் எந்தச் சூழ்நிலையிலும் கைவிடாத 'எவர்கிரீன் சூப்பர் ஸ்டார்' சைக்கிள்களுக்கு மாறத் தொடங்கியுள்ளனர்.

தேனிலவு படத்தில் ஜெமினி கணேசனும், வைஜெயந்தி மாலாவும் ஆளுக்கு ஒரு சைக்கிளில், காஷ்மீரை கால் வலிக்க பெடல் போட்டு சுற்றிச் சுற்றி வருவார்கள். அப்படி காதலுக்கும், கடமைக்கும் கை கொடுத்த சூப்பர் வாகனமாக திகழ்ந்தது சைக்கிள்.

அந்தக் காலத்தில் வீட்டுக்கு நாலு சைக்கிள்கள் நிற்பதைப் பார்க்கலாம். காலையில் எழுந்ததும் கை வலிக்க சைக்கிளைத் துடைத்து, ஆயில் விட்டு, பெடலை விர்ரென வேகமாக சுற்றி டிரையல் பார்த்து, பிரேக் பிடித்துப் பார்த்து, பெல் அடித்துப் பார்த்து எல்லாவற்றையும் பக்காவாக பார்த்து விட்டு, ரோட்டில் இறங்கி, பெடலை அழுத்தி ஜம்ப் செய்து ஏறி அமர்ந்து ஓட்டும் சுகமே தனிதான்.

கிராமப் புறங்களில், சைக்கிள்களின் ஹேன்ட் பார்களில், குஞ்சம் கட்டி விட்டு, குஜாலாக ஓட்டுவதைப் பார்க்கலாம்.

சைக்கிள் ஒரு வாகனமாக மட்டும் இல்லாமல், சிறந்த உடற்பயிற்சி சாதனமாகவும் உள்ளது. கலகலவென ஓடிக் கொண்டிருந்த சைக்கிள்களின் மவுசு நாளாக ஆக குறைந்து போயின.

மொபட்டுகளும், மோட்டார் சைக்கிள்களும், பின்னர் கார்களும், சைக்கிள்களை ஓவர்டேக் செய்து விட்டன. இருந்தாலும் நம் வீட்டு 'பெருசுகள்' ஓட்டி ஓய்ந்த சைக்கிள்கள் இன்றும் பழைய நினைவுகளை நமக்கு நினைவூட்டியபடி இருப்பதை பல வீடுகளில் காணலாம்.

இப்படிப்பட்ட சூப்பர் வாகனமான சைக்கிள்களுக்கு இன்று மீண்டும் மவுசு பெருகியுள்ளது. ஓடி விலகிப் போனவர்கள் கூட இன்று சைக்கிள்களை நாடி போக ஆரம்பித்துள்ளனர். காரணம் - பெட்ரோல்!.

தாறுமாறாக உயர்ந்து வரும் பெட்ரோல் விலை காரணமாக வண்டியை ஓட்டுவதா, உருட்டுவதா என்ற குழப்பமான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதிலும் பிரீமியர்தான், பவர்தான் என்று பெட்ரோல் பங்குகள் கண்ணாமூச்சி ஆட ஆரம்பித்துள்ளதால், நடுத்தர வர்க்க மக்களின் அடிப்படை ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.

இதையடுத்து மீண்டும் சைக்கிள்களுக்கு மக்கள் திரும்ப ஆரம்பித்துள்ளனர். மாணவ, மாணவியர், குறைந்த தூரத்தில் அலுவலகங்களைக் கொண்டிருப்போர், இளைஞர்கள், பெண்கள் என பலரும் தற்போது சைக்கிள்களுக்கு மாறி வருகின்றனர்.

இரண்டாம் நிலை நகர்ப் பகுதிகளில் தான் இந்த மாற்றம் கண்கூடாகத் தெரிகிறது.

இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 'வால்ட்யூப்' போன சைக்கிள் மாதிரி காணப்பட்ட கடைகளில் இப்போது மக்கள் கூட்டம். சின்ன சைக்கிள், பெரிய சைக்கிள் என பலதரப்பிலான சைக்கிள்களும் விறுவிறுப்பாக விற்று வருகிறதாம்.

சைக்கிள்களின் விலையும் பொருளாதாரத்திற்கு உகந்ததாக உள்ளதாலும், பராமரிப்பு செலவு சுத்தமாக குறைவு என்பதாலும் சைக்கிள்கை மக்கள் நாட ஆரம்பித்துள்ளனர்.

பெரிய சைக்கிள்களின் விலை ரூ.2500 முதல் ரூ.10 ஆயிரம் வரை இருக்கிறது. பேன்சி சைக்கிள்களைத்தான் பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். ஸ்டான்டர்ட் ரக சைக்கிள்களும் கூட நன்றாகவே விற்கின்றன.

ஒவ்வொரு வயதினருக்கும் பிடித்தமான வகையில் விதம் விதமான சைக்கிள்கள் கடைகளை அலங்கரித்து நிற்கின்றன. சைக்கிள் வாங்குபவர்கள் கூடவே ஒரு காற்றிக்கும் பம்பையும் வாங்கி விடுகின்றனர். இதனால் காற்றடிக்க வேண்டிய செலவும் இல்லை.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதால் வேறு வழியில்லாமல் சைக்கிள்களுக்கு மாறியவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், உடற்பயிற்சியாக இருக்குமே என்ற எண்ணத்தில் சைக்கிள் வாங்குபவர்களும் கணிசமாக உள்ளனர்.

சென்னை நகரில் உள்ள ரயில் நிலையங்களில் முன்பெல்லாம் சைக்கிள்களை அதிகம் காண முடியாது. அதற்கென பெரிதாக இடமும் ஒதுக்கியிருக்க மாட்டார்கள். ஆனால் இப்போதெல்லாம் பைக்குகளுக்கு நிகராக சைக்கிள்களும் அதிக அளவில் வருவதாக கூறுகின்றனர்.

வாழ்க்கையே ஒரு 'சைக்கிள்'தானே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+