தொடங்கியது லாரி ஸ்டிரைக்-காய்கறி விலை கிடுகிடு உயர்வு

பழைய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும், டீசல் தாராள சப்ளை செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். இப்போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. இதற்குஅனைத்து மாநில லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்தன.
இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் திட்டமிட்டபடி போராட்டம் தொடங்கியது. நள்ளிரவு 12மணி முதல் அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டன.
தமிழகத்திலும் லாரிகள் அனைத்தும் முழுமையான அளவில் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன. சரக்கு ஏற்றும் லாரிகள், காய்கறி லாரிகள், செங்கல், மணல் லாரிகள் உள்ளிட்ட அனைத்து வகை லாரிகளும், வேன்களும் இப்போராட்டத்தில்கலந்து கொண்டுள்ளன.
இதன் காரணமாக காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் வரத்து வெகுவாக குறைந்து போனது. சென்னை கோயம்பேட்டுக்கு நேற்று மாலை முதலே லாரிகள் வரத்து நின்று போய் விட்டது.
லாரிகள் ஸ்டிரைக் காரணமாக காய்கறிகளின் விலை நேற்றே உயரத் தொடங்கி விட்டன.
சமையஸ் கேஸ் டேங்கர் லாரிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன. இதனால் கேஸ் சிலிண்டர்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தெரிகிறது.
கட்டுமானப் பொருட்களான செங்கல், மணல், ஜல்லி உள்ளிட்டவற்றின் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தத்தால் ஒருநாளைக்கு ரூ. 200 கோடி அளவுக்கு லாரி உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அனைத்துத் தரப்பையும் சேர்த்தால் ஒரு நாளைக்கு ரூ. 1500 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஸ்டிரைக் காரணமாக கிட்டத்தட்ட 10 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள்.
தமிழகழம், புதுவை, கர்நாடகம், ஆந்திரா, கேரளா ஆகிய தென் மாநிலங்களில் கிட்டத்தட்ட 5 லட்சம் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன
சரக்குகள் தேக்கம்:
காய்கறிகள், சமையல் காஸ், ஜவுளி, முட்டை, மஞ்சள் மற்றும் இரும்பு பொருட்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சரக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்வது முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால்
நாமக்கல் மண்டலத்தில் 850-க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 2 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகிறது. இந்த முட்டைகள் தமிழகம், கேரளா, தமிழக சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. லாரி ஸ்டிரைக்கால் 2 கோடி முட்டைகள் அனுப்பப்படாமல் தேங்கியுள்ளன.
ஸ்டிரைக்கால் இந்தியா முழுவதும் தினமும் ரூ.1000 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. தென்மாநிலங்களில் தினமும் ரூ.200 கோடிக்கு வருவாய் பாதிப்பு அடைந்துள்ளன.
தென்மண்டல டேங்கர் லாரிகளும் ஸ்டிரைக்கில் கலந்து கொண்டு உள்ள தால் எண்ணை சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து காஸை சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளன.
சென்னையில் ...
சென்னை கோயம்பேட்டுக்கு தினசரி நூற்றுக்கணக்கான லாரிகள் வெளிமாநிலங்களிலிருந்து வரும். ஆனால் இன்று காலை முதல் ஓரிரு லாரிகளே வந்துள்ளன. இதனால் காய்கறி, பூ உள்ளிட்டவை வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
கோயம்பேடு மொத்த மார்க்கெட்டுக்கு தினசரி 500 டன் தக்காளி, 700 டன் வெங்காயம், 300 டன் உருளைக்கிழங்கு வரும். ஆனால் இன்று சொற்ப அளவிலேயே இவை வந்துள்ளதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
வெளிமாநிலங்களிலிருந்து வரும் பழம் உள்ளிட்டவையும் இன்று முற்றிலுமாக முடங்கி விட்டது.
சென்னை எழும்பூர், சென்டிரல் ரயில் நிலையங்களில் வந்து இறங்கியுள்ள சரக்குகளை ஏற்றிச் செல்ல வேன்கள் இல்லாததால் கூலித் தொழிலாளர்கள் வேலையின்றி அமர்ந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் பல்லடம் பகுதியில் இறைச்சிக் கோழிகளை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோட்டில்..
ஈரோடு, கரூர் பகுதிகளில் ஜவுளி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டிலிருந்து மஞ்சள், எண்ணை, கால்நடைத் தீவண ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் ஸ்டிரைக் காரணமாக ஒரு நாளைக்கு ரூ.20 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சேலத்தில் ..
சேலத்தில் ஜவ்வரிசி, இரும்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு நாளைக்கு ரூ. 25 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டிரைக் காரணமாக, மேட்டூர் அனல் மின் நிலையத்திலிருந்து சாம்பலை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எப்போதும் பிசியாக காணப்படும் அனல் மின் நிலையம் வெறிச்சோடிக் கிடக்கிறது.
தூத்துக்குடியில், உப்பு ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. லாரிகள் அனைத்தும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் உப்பு அள்ளப்படாமல் தேங்கிக் கிடக்கிறது.
மேட்டுப்பாளையம் காய்கறி மண்டியில் லாரிகள் ஏதும் இல்லாததால், ஊட்டியில் முட்டைகோஸ் உள்ளிட்டவற்றை அறுவடை செய்யும் பணி நடைபெறவில்லை.
மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலை காணப்படுகிறது. இப்போராட்டம் காரணமாக இன்றுமட்டும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடியில் 10, 000 லாரிகள் ஸ்டிரைக்:
நெல்லை, தூத்துக்குடியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. இதனால் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வேணி பாலசுப்பிரமணியன் கூறியதாவது, ஸ்டிரைக்கில் நெல்லை மாவட்ட லாரி உரிமையாளர்கள் முழுமையாக பங்கேற்கிறோம். நெல்லை மாவட்டத்தில் 200 டெங்கர் லாரிகள், உள்ளிட்ட 4,800 லாரிகள் இயங்கி வருகின்றன. இதில் டெங்கர் லாரிகளை தவிர மற்ற லாரிகளின் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. போராட்டம் நீடிக்கும் பட்சத்தில் டேங்கர் லாரிகளை தொடர்ந்து இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும்.
லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதால் நெல்லை மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications