ஒரு வாரத்திற்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க பாஜக கெடு
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தனது அரசின் பெரும்பான்மையை ஒரு வாரத்திற்குள் நிரூபிக்க வேண்டும் என பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கெடு விதித்துள்ளது.
டெல்லி நிலவரம் குறித்து விவாதிக்க தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடந்தது. அத்வானி வீட்டில் நடந்த இந்தக் கூட்டத்தில் கூட்டணித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பாஜக செய்தித் தொடர்பாளர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், மக்களை குழப்பும் வகையில் பேசி வருகிறது காங்கிரஸ். மழைக் காலக் கூட்டத் தொடரில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது.
ஆனால், நாடாளுமன்றத்தில் அனுமதி பெற்ற பின்னரே அணு சக்தி ஒப்பந்தம் செயல்படுத்தப்படும் எனவும் கூறி வருகிறது. இதன் மூலம் மக்களைக் குழப்ப முயற்சிக்கிறது காங்கிரஸ்.
வழக்கமாக நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முடியாது. சிறப்பு கூட்டத்தைத்தான் கூட்ட வேண்டும்.
எனவே இன்னும் ஒரு வாரத்திற்குள் அதை மத்திய அரசு செய்ய வேண்டும் என்றார் சுவராஜ்.
இதற்கிடையே, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி பிரதமர் மன்மோகன் சிங் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என குடியரசுத் தலைவரை நேரில்சந்தித்து வலியுறுத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை குடியரசுத் தலைவரை தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் சந்திப்பார்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வி.கே.மல்ஹோத்ரா கூறியுள்ளார்.
--












Click it and Unblock the Notifications