பழனி முருகனுக்கே பஞ்சாமிர்தம்.. கோவில் நிலம் ஏப்பம்! சீரியஸான சிபிசிஐடி.. களத்தில் பதிவுத் துறை!
சென்னை: பழனி முருகன் கோயில் நில மோசடி விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார், முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட சம்மந்தப்பட்ட 1.40 ஏக்கர் இடத்தில் சிபிசிஐடி எஸ்பி சஜிதா, டிஎஸ்பி அஜய் தங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாகக் கள ஆய்வு நடத்தியதைத் தொடர்ந்து, பழனி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வருகை தந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், முறைகேடு தொடர்பாக, பதிவுத் துறை சார்பில் அமைத்த 3 பேர் கொண்ட விசாரணைக் குழு பழநி பதிவுத் துறை அலுவலகத்தில் விசாரணையை தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து 5-வது நாளாகக் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்கின் மிக முக்கிய நகர்வாக, முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட சம்மந்தப்பட்ட 1.40 ஏக்கர் இடத்திற்குச் சிபிசிஐடி மாவட்ட கண்காணிப்பாளர் சஜிதா, துணைக் கண்காணிப்பாளர் அஜய் தங்கம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழுவினர் நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபட்டனர்.
பழனி கோவில் நிலம்
அந்த 1.40 ஏக்கர் இடத்தில் நேரடியாக நின்று நிலத்தின் எல்லைகள், வரைபடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு விபரங்களைக் கையில் உள்ள கிரையப் பத்திர ஆவணங்களோடு ஒப்பிட்டு அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். இட ஆய்வு முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சிபிசிஐடி எஸ்பி சஜிதா மற்றும் டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேராகப் பழனி சார்பதிவாளர் அலுவலகத்திற்குத் திரும்பினர்.
சிபிசிஐடி
கள ஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள கோப்புகளையும், அதிகாரிகளின் வாக்குமூலங்களையும் ஒப்பிட்டுச் சிபிசிஐடி போலீசார் மீண்டும் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்நிலையில், பத்திரப் பதிவு முறைகேடு தொடர்பாக, பதிவுத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 3 பேர் கொண்ட உயர்நிலை விசாரணைக் குழு இன்று பழநி பதிவுத் துறை அலுவலகத்தில் விசாரணையை தொடங்கியது.
போலீஸார் சோதனை
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளையைச் சேர்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கியதாக கூறப்படும் வெள்ளைத்துரை மற்றும் சேதுபதி ஆகிய மூவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய சிபிசிஐடி தனிப்படைகள் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையில், நேற்று விழுப்புரத்தில் உள்ள முருகதாஸ் வீட்டில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது வீடு பூட்டப்பட்டிருந்ததால், விழுப்புரம் போலீஸாரின் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆவணங்கள் பறிமுதல்
இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், வழக்கில் முக்கிய குற்றவாளியாக முருகதாஸ் கருதப்படுவதால், அவரது வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த நிலையில், நிலப்பதிவு முறைகேடு தொடர்பாக நிர்வாக ரீதியிலான விசாரணை நடத்த பதிவுத் துறை சார்பில் 3 பேர் கொண்ட உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் கூடுதல் பதிவுத் துறைத் தலைவர் சுதா மல்யா, உதவி பதிவுத் துறைத் தலைவர் பூங்கொடி மற்றும் மாவட்ட பதிவாளர் கண்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
5-வது நாளாக விசாரணை
இன்று காலை அவர்கள் தனித்தனி வாகனங்களில் பழநி மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினர். மாவட்ட பதிவாளர் (தணிக்கை) செல்வகுமார் மற்றும் அலுவலக பணியாளர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி, ஆவணங்கள் மற்றும் பதிவுகள் குறித்து விளக்கம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், 5-வது நாளாக சிபிசிஐடி அதிகாரிகளும் காலை முதலே அலுவலகத்தில் முகாமிட்டு, வழக்குக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
பதிவுத் துறை விசாரணை
ஒரே நேரத்தில் உயர்நிலைக் குழுவும், சிபிசிஐடியும் விசாரணை நடத்தியதால், பத்திரப்பதிவு பணிகளுக்காக வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் வெளியே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நிலப்பதிவு முறைகேடு தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையும், பதிவுத் துறையில் நடந்ததாக கூறப்படும் விதிமீறல்கள் குறித்த நிர்வாக விசாரணையும் ஒரே நேரத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications
