'அமர்சிங் எபெக்ட்'-பெட்ரோலியத்துறைக்கு புதிய செயலாளர்
டெல்லி: சமாஜ்வாடி கட்சியின் நெருக்குதலால் மத்திய பெட்ரோலியத்துறைச் செயலாளராக ஆர்.எஸ்.பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இரு தினங்களுக்கு முன் இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
முகேஷ்-அனில் அம்பானி சகோதரரர்கள் மோதலின் எதிரொலியாக இந்த மாற்றம் நடந்துள்ளது.
ரிலையன்ஸ் பெட்ரோலியம் அதிபரான முகேஷுக்கு ஆதரவாக பெட்ரோலிய அமைச்சகம் செயல்படுவதாக குற்றம் சாட்டிய சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளரும் அனிலின் நண்பருமான அமர்சிங், அமைச்சர் முரளி தியோராவையே மாற்ற வேண்டும் என நெருக்குதல் தந்தார்.
ஆட்சியைக் காப்பாற்ற முழுக்க முழுக்க சமாஜ்வாடி கட்சியை சார்ந்துள்ள மத்திய அரசு, அமர்சிங் சொனன நிபந்தனைகளை ஒவ்வொன்றாக ஏற்று வருகிறது.
அந்த வகையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பெட்ரோலியத்துறை செயலாளராக இருந்த ஸ்ரீனிவாசன் மாற்றப்பட்டுள்ளார். இவர் முகேஷுக்கு ஆதரவாக இருந்ததாக அமர்சிங் கூறியுள்ளார்.
வரும் 31ம் தேதி தான் ஸ்ரீனிவாசன் ஓய்வு பெறவுள்ளார். வழக்கமாக இதுபோன்ற உயர் அதிகாரிகள் நியமிக்கப்படும்போது, ஓய்வு பெறுபவர் விலகுவதற்கு இரு நாட்களுக்கு முன்னர் தான் அறிவிப்பு வெளியிடப்படும்.
ஆனால், 31ம் தேதி வரை காத்திருக்காமல் இப்போதே புதிய செயலாளராக பாண்டேவை அறிவித்துவிட்டது மத்திய அரசு.
இதுவரை பாண்டே இரும்புத்துறை செயலாளராக இருந்து வந்தார். 31ம் தேதி தனது பொறுப்பை பாண்டேவிடம் ஒப்படைக்கவுள்ளார் ஸ்ரீனிவாசன்.


Click it and Unblock the Notifications
