யுவராஜ் பார்ட்டி: கண்டித்த கபிலுக்கு அம்மா கண்டனம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பார்ட்டிகளில் கலந்து கொள்வதற்குப் பதிலாக ஆட்டத்தில் கவனம் செலுத்தி சச்சின் டெண்டுல்கரைப் போல அணியில் நிரந்தர இடம் பிடிக்க முயல வேண்டும் என முன்னாள் கேப்டன் கபில்தேவ் அறிவுரை கூறியுள்ளார். இதற்கு யுவராஜ்சிங்கின் தாயார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி, இலங்கையிடம் தோல்வி அடைந்து கோப்பையை கோட்டை விட்டது. அந்தப் போட்டிக்கு முதல் நாள் இரவு உள்ளூர் நண்பர்களோடு முன்னணிவீரர்களான யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா ஆகியோர் பார்ட்டியில் கலந்து கொண்டு விடிய விடிய சந்தோஷமாக இருந்ததாக செய்திகள் வெளியாகின.

இதனால் அடுத்த நாள் சரிவர ஆட முடியாமல் பெவிலியன் திரும்பினர். இதனால் இந்தியா தோல்வி அடைய நேரிட்டது.

இதுகுறித்து சர்ச்சை எழுந்தபோதிலும், அதுகுறித்தெல்லாம் விசாரிக்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கமுக்கமாகி விட்டது. என்ன நடந்தது என்பதை விசாரிக்க கூட கிரிக்கெட் வாரியம் மறுத்தது சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த நிலையில் இலங்கை தொடரில் யுவராஜ் சிங் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் கேப்டன் கபில்தேவ், யுவராஜ் சிங்அடிக்கடி பார்ட்டிகளுக்குப் போவதைத் தவிர்க்க வேண்டும் என்று அட்வைஸ் செய்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், யுவராஜ் திறமையான வீரர். இவர் இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டு, கிரிக்கெட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவரது தந்தை யோகராஜ் மிகச் சிறந்த டெஸ்ட் வீரராக விளங்கினார். தந்தையை போல கடினமாக முயற்சி செய்தால், யுவராஜ் டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிப்பதை யாரும் தடுக்க முடியாது.

சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவதன் மூலமே அணியிலிருந்து வெளியேற்றப்பட முடியாத அளவுக்கு நிரந்தர இடம் பிடித்துள்ளார். அவரைப் போல மாற யுவராஜ் முயல வேண்டும்.

இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி செல்ல, திறமை மிக்க முன்னாள் வீரர்கள் பலர் உள்ளனர். இவர்களை பயிற்சியாளராக நியமிக்கலாம். வெளிநாட்டினர் மட்டுமே சிறப்பான பயிற்சியை வழங்கமுடியும் என்று கூறமுடியாது. நானும் கவாஸ்கரும் இந்திய கிரிக்கெட் வளர்ச்சிக்காக பாடுபட தயாராக இருக்கிறோம்.

நிர்வாகம் எங்கள் அனுபவத்தை பயன்படுத்தி, வளர்ச்சிப் பாதையில் கிரிக்கெட் வெற்றிநடை போட வழிவிட வேண்டும். ஆனால் நிர்வாகத்தில் சுயநலவாதிகள் சிலர் இதற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றனர்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்), இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்) இரண்டு அமைப்புகள் கிரிக்கெட் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகின்றன. ஒரே அமைப்பால், விளையாட்டின் தரத்தை உயர்த்த முடியாது. இங்கிலாந்து கவுன்டி அணிகளில் இடம்பெற்றுள்ள ஐ.சி.எல். வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் போர்டு தடையாக இருப்பது துரதிருஷ்டவசமானது. மத்திய அரசுக்கு மட்டுமே இந்த உரிமை உள்ளது என்றார் கபில்தேவ்.

யுவராஜ் சிங் அம்மா கண்டனம்:

இந்த நிலையில் கபில்தேவின் அட்வைஸ் தேவையற்றது என்று யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கபில்தேவின் கருத்துக்களைப் படித்து நான் வேதனை அடைந்தேன். ஒரு தாயாக, நான் மிகுந்த வலியை உணர்கிறேன். யுவராஜ் சிங் பிறந்தது முதல் அவரை கபில் தேவுக்குத் தெரியும். அப்படிப்பட்ட கபில்தேவே இப்படிக் கூறியது எனக்கு வருத்தமளிக்கிறது.

பத்திரிக்கைகளில் வந்துள்ள தவறான செய்திகளின் அடிப்படையில் கபில் பேசியிருப்பது தவறானது.

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல் எறியும் வேலை வேண்டாம் என கபில்தேவை கேட்டுக் கொள்கிறேன். அவருடைய கடந்த காலத்தை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அவர் விளையாடிய காலத்தில் அவர் செய்த தவறுகளை திரும்பிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நாம் நமது காலத்தில் தேவதையாக இருந்ததில்லை என்பது அவருக்குப் புரியும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் ஹனீப் முகம்மது, மேற்கிந்திய நட்சத்திர வீரர் சர் கர்பீல்ட் சோபர்ஸ் போன்றோரெல்லாம் யுவராஜைப் பாராட்டியுள்ள நிலையில் கபில்தேவ் என்ற மாபெரும் வீரர் இப்படிப் பேசியிருப்பது வருத்தம் தருகிறது என்று கூறியுள்ளார் ஷப்னம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+