ஆசிரியர் பயிற்சி பள்ளியில் அரவாணிக்கு சீட்
சேலம்: தமிழகத்திலேயே முதல் முறையாக, சேலம் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் அரவாணி ஒருவருக்கு சீட் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் இளம்பிள்ளை மாடத்தூரை சேர்ந்தவர் விவசாயி வையாபுரி. அவரது மனைவி பாஞ்சாலி. அவர்களுக்கு தேன்மொழி என்ற மகளும் சரவணகுமார், கிருஷ்ணன் என்ற மகன்களும் உள்ளனர்.
இதில் கிருஷ்ணன் அரவாணியாக மாறினார். ஆனால் மற்ற அரவாணிகளை போல குடும்பத்தை விட்டு பிரியாமல் பெற்றோருடன் வசித்து வந்தார். பின்னர் முறையான அறுவைச் சிகிச்சை மூலம் பெண்ணாகமாறிய அவர் தனது பெயரையும் திவ்யா கிருஷ்ணன் என மாற்றிக் கொண்டார்.
இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த திவ்யா கிருஷ்ணன், 2004ல் பிளஸ் 2 தேர்வில் 883 மதிப்பெண் பெற்றார். வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாத திவ்யா, நான்கு ஆண்டுகளாக தனது சகோதரி வீட்டில் தறிநெசவு தொழில் செய்து வந்தார்.
அவருக்கும் வீட்டுக்கு அருகில் தறிதொழில் செய்து வந்த பெருமாளுக்கும் காதல் மலர்ந்தது. மூன்று ஆண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் விட்டுப் போன தனது படிப்பைத் தொடர தீர்மானித்தார் திவ்யா. இதையடுத்து தாரமங்கலம் வெற்றிவேல் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர விண்ணப்பித்தார். அங்கு அவருக்கு சீட் வழங்கப்பட்டது.
அரவாணி ஒருவருக்கு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சீட் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இது திவ்யாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது.
இது குறித்து திவ்யா கிருஷ்ணன் கூறுகையில், வறுமை காரணமாக படிக்க முடியாமல் இருந்தது. இப்போது ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இடம் கிடைத்துள்ளது. நன்றாக படித்து பட்டம் பெற்று சமுதாயத்தில் நல்ல முறையில் வாழ்ந்து மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications