இது அத்வானியின் 'டர்ட்டி டிரிக்ஸ்'-காங். தாக்கு!
டெல்லி: தங்களுக்கு சமாஜ்வாடி கட்சி பணம் தந்ததாக பாஜக எம்பிக்கள் கூறியிருப்பது அத்வானியின் 'டர்ட்டி டிரிக்ஸ்'களில் ஒன்று என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுமாறு பாஜகவைச் சேர்ந்த மூன்று எம்.பிக்களுக்கு சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சி்ங்கும், சோனியாவின் அரசியல் செயலாளர் அகமத் படேலும் பணம் கொடுத்ததாக புகார் கூறப்பட்டது.
மேலும் அதில் அட்வான்சாக தரப்பட்ட பணம் என்று சொல்லி சுமார் ரூ. 1 கோடியை சபாநாயகர் முன் பாஜக எம்.பிக்கள் கொட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக இத்தகைய சம்பவம் நடந்ததால் நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
ஆனால், இதை பாஜக தலைவர் அத்வானியும், அவரது டர்ட்டி டிரிக்ஸ் (Dirty tricks) ஆலோசகர்களும் இணைந்து நடத்திய நாடகம் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
அரசு வெல்லப் போகிறது என்பதை உணர்ந்தவுடன், இந்த வெற்றி பணத்தால் கிடைத்தது என்பது போன்ற பிரமையை உருவாக்கவே இந்த நாடகத்தை அத்வானி நடத்தியுள்ளார் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.
இந்தப் பணத்தின் மூலத்தை கண்டுபிடித்தால், குற்றவாளிகளைப் பிடித்துவிடலாம். எனவே முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்றார்.
மேலும் ஒரு அரசின் பெயரைக் கெடுப்பதற்காக நாடாளுமன்றத்தின் புனிதத்தையே கூட கெடுக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்ட அத்வானியை நாடும் மக்களும் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.
மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் கூறுகையில், நம்பிக்கை வாக்கெடுப்பை தடுப்பதற்காக நடத்தப்பட்ட நாடகம் இது. வாக்கெடுப்பில் தோற்று விடுவோம் என்பதை அறிந்ததும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார் அத்வானி. இது மிக துரதிர்ஷ்டவசமானது. ஒரு முக்கிய கட்சியின் மூத்த தலைவர் இந்தச் செயலில் ஈடுபட்டது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது என்றார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில், நம்பி்க்கை வாக்கெடுப்பில் ஜெயித்துவிடுவோம் என பயத்தில் நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர் குலைக்க வேண்டும் என்ற எண்ண்ததுடன் இந்த நாடகத்தை பாஜக நடத்தியது என்றார்.
சோனியாவின் அரசியல் செயலாளர் அகமத் படேல் கூறுகையில், தோல்வி பயத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்ப்பதற்காகவே இத்தகைய தந்திரத்தில் பாஜக ஈடுபட்டது. அதில் என் பெயரையும் இழுத்துள்ளனர். எம்.பிக்களிடம் பேரம் பேசியதாக யாராவது நிரூபித்தால் பொது வாழ்க்கையில் இருந்தே விலகிவிடுகிறேன் என்றார்.
சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறுகையி்ல்,
அரசின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக நடத்திய இந்த மட்டமான செயலால் செயல்களால் நாடாளுமன்றத்தின் புனிதத்தையே அந்தக் கட்சி கெடுத்துவிட்டது.
அதிகாரத்துக்கா எந்த அளவுக்கும் செல்பவர்கள் தான் பாஜகவினர். அதை மீண்டும் உதாரணத்துடன் நிரூபித்துவிட்டனர்.
பாஜக பற்றி என்னிடம் ஏராளமான ரகசியங்கள் உள்ளன. என்னை கொலை செய்யக் கூட முயற்சித்தனர். கடவுள் அருளால் நான் தப்பினேன். இந்தியாவுக்கு அவமரியாதையை தேடித்தந்து விட்ட இவர்களுக்கு மக்கள் தகுந்த தண்டனை தருவார்கள் என்றார்.
சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் கூறுகையில்,
யாராவது பணம் தந்திருந்தால் அதை போலீசில் போய் அல்லவா சொல்லியிருக்க வேண்டும். நானோ அல்லது சமாஜ்வாடி கட்சியின் பிரமுகரோ அவர்களுடைய வீட்டுக்கு சென்று பணத்தை கொடுத்திருந்தால் போலீசில் புகார் செய்து கைது செய்து இருக்கலாமே?.
அல்லது சபாநாயகரிடமாவது புகார் சொல்லி பணத்தையும் அவரிடம் ஒப்படைத்திருந்தால் இவர்கள் சொல்வதை யாராவது கொஞ்சமாவது நம்புவார்கள்.
பணத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் கொட்டி பாஜகவினரின் செயலுக்கு மன்னிப்பே கிடையாது. அந்த 3 பாஜக எம்பிக்கள் மீதும் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து சிறையில் தள்ளுவேன் என்றார்.












Click it and Unblock the Notifications