மாயாவதி பிரதமரா?-கொதிக்கிறார் பால்தாக்கரே
புனே: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை பிரதமராக்க இடதுசாரிகள் முயற்சி மேற்கொள்வதற்கு சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தனது அதிகார பலத்தாலும், தொழிலதிபர்களின் உதவிகளாலும், வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், அரசு காப்பாற்றப்பட்டிருக்கலாம். ஆனால், நாட்டின் மக்களாட்சி தத்துவம் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங் மிகவும் நல்லவர். ஆனால், அவர் மகாபாரதத்தில் வரும் துரியோதனன் போன்றவர்களால் சூழப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளால் மிகவும் பலவீனமான பிரதமர் என்று ஏளனம் செய்யப்பட்ட மன்மோகன் சிங், நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்று, தான் ஒரு பலசாலி என்பதை நிரூபித்துள்ளார்.
மன்மோகன் சிங் அரசை கவிழ்க்க முடியாத இடதுசாரி கட்சிகள், மாயாவதியை பிரதமராக்க முயன்றன. குதிரை பேரம் பேசும் நபர்களை விட ஆபத்தானவர் மாயாவதி.
இதை இடதுசாரிகள் உணரவில்லை. மாயாவதிக்கு பிரதமர் பதவி என்கிற கனவை உருவாக்கியதன் மூலம், வரலாற்றில் மிகப்பெரிய தவறை இடதுசாரி கட்சிகள் செய்துவிட்டன.
காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட வேண்டிய கட்சி. ஆனால், அதற்காக, மாயாவதியை பிரதமராக்குவது என்பது நோய்க்கு தரும் மருந்தே நோயாளிக்கு ஆபத்தை விளைவிப்பது போன்றதாகும்'.
சீனாவிடம் இந்தியா அடிமையாக்கப்பட்டாலும், அதை பற்றியெல்லாம் இடதுசாரி கட்சிகள் கவலைப்படாது. ஆனால், அமெரிக்காவுடன் நட்பு பாராட்டுவதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.
ஈராக்கில், ஜார்ஜ் புஷ் செய்ததைக் காட்டிலும், நந்திகிராமில் நடந்த வன்முறை சம்பவங்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.












Click it and Unblock the Notifications