அகமதாபாத் - சூரத்தில் 4 வெடிக்காத குண்டுகள், வெடிப் பொருள் கார் சிக்கின!!
இவற்றைத் தவிர, சூரத் நகரில் வெடிப் பொருட்கள் நிறைந்த கார் ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர்.
அகமதாபாத் நகரில் நேற்று 17 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் சிக்கி 49 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
நகரம் மற்று அதன் சுற்றுப் புறப் பகுதிகள் முழுவதுமே பெரும் பதட்டத்தில் உள்ளன. அதி விரைவுப் படையினர், தேசிய பாதுகாப்புப் படை, அதிரடிப் படை வீரர்கள், உள்ளூர் போலீஸார் நகர் முழுவதும் தீவிர பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்றைய குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து வெடிக்காத குண்டுகள் எங்கேனும் இருக்கிறதா என்ற சோதனையில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் சகிதம் இந்தச் சோதனை நடந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று குண்டு வெடிப்பு நடந்த இடங்களில் ஒன்றான ஹத்கேஷ்வர் பகுதியில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் வெடிக்காத நிலையில் இருந்த ஒரு குண்டு இன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அதே போல கலோல் பகுதியில் யோகேஸ்வர் பார்க் என்ற இடத்திலும் ஒரு குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சூரத்தில் இரு குண்டுகள், வெடிப் பொருள் நிரம்பிய கார்:
இதற்கிடையே குஜராத்தின் முக்கிய நகரான சூரத்தில் நூபுர் மருத்துவமனை அருகே இன்று காலை வெடிக்காத ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. வராஜா ரோட் பகுதில் இன்னொரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெடிப்பொருட்கள் நிறைந்த ஒரு கார் ஒன்றும் சூரத் தநகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த குண்டுகளை செயலிழக்க வைக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மேலும் வெடிக்காத குண்டுகளை கண்டுபிடிக்கும் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. சூரத் நகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
30 பேர் கைது:
குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக அகமதாபாத் போலீஸார் இதுவரை 30 பேரை கைது செய்துள்ளனர். அவர்களுக்கும் குண்டுவெடிப்புகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.













Click it and Unblock the Notifications