வாஜ்பாய் வல்லவர்-மன்மோகன் நிபுணர்: கலாம்
அமிர்தசரஸ்: அரசு முடிவுகளை எடுப்பதில் வல்லவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். இன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கோ பொருளியலில் மிகப் பெரிய நிபுணர் என முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
சனிக்கிழமை மாலை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நிருபர்களிடம் பேசினார் அப்துல் கலாம்.
நாட்டையே வெட்கித் தலைகுனிய வைக்கும் அளவுக்கு இன்றைக்கு பாராளுமன்றத்திலேயே கத்தை கத்தையாக பணத்தைக் கொட்டுகிறார்களே, இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?-இதுதான் அவரிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி.
அதற்கு அவர் அளித்த பதில்:
அரசியல்வாதிகளில் 70 சதவிகிதத்தினர் அரசியலுக்காக அரசியல் நடத்துபவர்களாக உள்ளனர். 30 சதவிகித அரசியல்வாதிகள்தான் வளர்ச்சி அரசியல் நடத்துகிறார்கள். இந்த நிலை துரதிருஷ்டவசமானது. இது அப்படியே தலைகீழாக மாற வேண்டியது அவசியம்.
வாஜ்பாய்-மன்மோகன் சிங் என இரண்டு பிரதமர்களின் அரசுகளுக்கு தலைமை தாங்கியிருக்கிறீர்கள். இருவரையும் ஒப்பிடுங்கள்...
உடனே கொஞ்சமும் யோசிக்காத கலாம், முடிவுகளை எடுப்பதில் வல்லவர் வாஜ்பாய். பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர் மன்மோகன் சிங் என்றார் ரத்தினச் சுருக்கமாக.
பின்னர் இந்தி-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் குறித்து விரிவாகப் பேசினார் கலாம். அவர் கூறியதாவது:
நல்ல விஷயம் எங்கேயிருந்து கிடைத்தாலும் ஏற்றுக் கொள்வதில் தப்பில்லை. இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் இன்றைக்கு முக்கியமானது, மின்சக்தி மற்றும் அணுசக்தியில் நாடு தன்னிறைவு அடைய மிகவும் உதவக்கூடிய ஒப்பந்தம் இது. என்னைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தம் குறித்து தெளிவான விளக்கங்களை நாட்டு மக்களுக்கு அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும்.
இன்னொன்று, இந்தியா தன்னிடம் உள்ள தோரியத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் தோரிய ரியாக்டர்களை அமைப்பதில் இனி கவனம் செயுத்த வேண்டும். இதுதான் மின் சக்தி மற்றும் அணுசக்தியில் உண்மையிலேயே இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றும்.
எந்த சர்ச்சைகளுக்கும் இடமளிக்காத, 'சுத்தமான சக்தி'யை நாடு பெற இது வழிவகுக்கும். இந்த நிலையை நாம் அடைய 7 முதல் 10 ஆண்டுகளாகக் கூடும். ஆனால் அதன்பிறகு இந்தியா ஒரு வலிமையான சக்திமிக்க நாடாகிவிடும்.
இதில் முக்கியமான ஒரு விஷயம், தோரியம் ரியாக்டர்களுக்கும் கூட ஒரு குறிப்பிட்ட அளவு யுரேனியம் தேவைப்படுகிறது. இதை நாம் மறந்துவிடக் கூடாது.
தோரிய ரியாக்டர்களை முழுமையாக இயங்க வைத்த பிறகு, சக்தி துறையில் நமக்கான தன்னிறைவு கிடைத்த பிறகு, அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை நம்மால் மறுபரிசீலனை செய்ய முடியும். அதுவரை நமது நெருக்கடிகளைச் சமாளிக்க அமெரிக்காவுடனான இந்த டீல் முக்கியம், என்றார் கலாம்.
கிடைக்கிற நல்ல வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதுதான் ஒரு புத்திசாலித்தனமான நாட்டுக்கு அழகு என்றார் அணு ஒப்பந்தம் குறித்த மற்றொரு கேள்விக்கு.
இன்னொரு பொக்ரான் சோதனை நடைபெறும் வாய்ப்புள்ளதா? – இது ஒரு நிருபரின் கேள்வி.
இந்தியா ஏற்கெனவே வலிமையான அணுசக்தி நாடு என்பதை உலகம் ஒப்புக் கொண்டுவிட்டது. இன்னும் எத்தனைமுறை பொக்ரானில் அணுகுண்டு வெடிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்? என திருப்பிக் கேட்டார் கலாம். அதோடு அணுசக்தி பற்றிக் கேட்பதை நிறுத்திக் கொண்டார்கள் நிருபர்கள்.
கூட்டுக் குடும்பங்கள் அவசியம்:
இச்சந்திப்பில் கலாம் மேலும் கூறியதாவது:
இந்தியாவில் மீண்டும் கூட்டுக் குடும்ப முறையை உற்சாகப்படுத்த வேண்டியது அவசியம். காரணம் கூட்டுக் குடும்பங்கள்தான் விஷமமற்ற, நல்ல குடிமகன்களை உருவாக்குகின்றன.
இந்தியக் கல்வி முறை நிறைய மாற வேண்டியிருக்கிறது. ஆரம்பக் கல்வியில்தான் ஒரு குழந்தையின் அறிவும் கற்பனைத் திறனும் சிறகு விரிக்கும். துரதிருஷ்ட வசமாக நமது இன்றைய கல்வி முறையில் அதற்கான வாய்ப்புகளே இல்லை, என்றார் வேதனையுடன்.












Click it and Unblock the Notifications