விலாஸ்ராவ் தேஷ்முக்-முகேஷ் அம்பானிக்கு தீவிரவாதிகள் மிரட்டல்
மும்பை: அகமதாபாத் தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு, தங்களது அடுத்த குறி மகாராஷ்ட்ர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் மற்றும் இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபர் முகேஷ் அம்பானிதான் என இமெயிலில் மிரட்டியுள்ளது.
இதுகுறித்து 14 பக்கங்கள் அடங்கிய இமெயில் ஒன்றையும் நேற்று சில குறிப்பிட்ட டிவி சேனல்கள் மற்றும் காவல்துறைக்கு இந்தியன் முஜாஹிதீன் அனுப்பியுள்ளது.
இதில் மகாராஷ்டிராவில் குரானை அவமதித்ததற்காகவும், மசூதிகளை தடை செய்ததற்காகவும் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கிற்கு விரைவில் 'மரண தண்டனை' அளிக்கப்படும் என்றும், வக்ப் வாரிய இடத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்ட முயன்ற முகேஷ் அம்பானிக்கும் இதே பாணியில் தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் பெயரும் இந்த தண்டனைக்குறியவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
மேலும் ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஆந்திர மாநில போலீசையும் எச்சரித்துள்ளனர் முஜாஹிதீன்கள்.
'நாங்கள் உங்களை கண்காணித்துக் கொண்டே இருப்போம். உங்களைத் தாக்கும் எங்களது பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. இன்ஷா அல்லா, விரைவில் ஆந்திராவிலும் எங்களது தாக்குதல் நடக்கும்' என்று மிரட்டியுள்ளனர்.
டைம்ஸ் இண்டியா மற்றும் அதன் டிவி சேனலான டைம்ஸ் நவ் ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரம் நடைபெறுவதால் அவர்களும் விரைவில் கொல்லப்படுவார்கள் என தங்கள் இமெயிலில் குறிப்பிட்டுள்ளனர் இந்தியன் முஜாஹிதீன்.












Click it and Unblock the Notifications