குண்டுவெடிப்புக்கு சதி-நெல்லையில் 2 தீவிரவாதிகள் கைது
பெங்களூர், அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் முக்கியமான நகரங்களான சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட நகரங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நெல்லையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களுடன் அப்துல் கபூர் என்பவரை நெல்லை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை மற்றும் நெல்லையில் குண்டுகளை வைக்க அவர் திட்டமிட்டிருந்ததாக போலீஸ் டிஜிபி ஜெயின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிஜிபி ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூர் மற்றும் அகமதாபாத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து தமிழகத்தில்தீவிரவாத செயல்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி முதல்வர் ஆணையிட்டதன் பேரில், தமிழக காவல்துறை முடுக்கி விடப்பட்டது.
நெல்லை, பேட்டையைச் சேர்ந்த சேவுகான் என்பவரின் மகனான அப்துல் கபூர் (39) வெடிகுண்டுகளை இயக்கும் டைமர் கருவிகளை நெல்லையில் தயாரித்து சென்னைக்குக் கொண்டு வரவுள்ளார் என்று தகவல் கிடைத்தது.
அதன் பேரில் நெல்லை போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். இதையடுத்து நெல்லை பேட்டை, மக்தூம் பள்ளிவாசல் தெருவில் உள்ள அப்துல் கபூர் தங்கியிருக்கும் வீட்டை 27ம் தேதி சோதனையிட்டபோது வெடிகுண்டுகளை குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கச் செய்வதற்கான கிளாக் மெக்கானிசம், மின்சுற்று வரைபடம், பேட்டரிகள், பிளாஸ்டிக் உருளைகள் மற்றும் வெடிகுண்டுகளுக்கான பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தம் 21 பொருட்கள் கபூரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவருடன் கூட்டாளிகள் உள்ளனரா என்பது குறித்தும், வேறு ஏதாவது அமைப்புடன் கபூருக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்று கூறியுள்ளார் ஜெயின்.
8 இடங்களில் குண்டு வைக்க திட்டம்:
கபூர் கைது குறித்து நெல்லை போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா கூறுகையில், டைமர் டிவைஸ்களை தயாரித்து சென்னைக்கு கொண்டு வரும் நோக்குடன் ஒருவர் பேட்டைக்கு வந்திருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து நாங்கள் அங்கு சென்று கபூரை கைது செய்தோம்.
அவரிடமிருந்து டைமர் கருவிகள் மற்றும் வெடிகுண்டுகளைத் தயாரிக்கப் பயன்படும் பொருட்கள் உள்பட 21 பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம்.
சுதந்திர தினத்தன்று நெல்லை மற்றும் சென்னை ஆட்சியர் அலுவலகங்கள், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட மொத்தம் 8 இடங்களில் குண்டு வைக்க தனக்கு உத்தரவிடப்பட்டிருந்ததாக கபூர் கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
கைது செய்யப்பட்ட கபூர் தற்போது களக்காடு காவல் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார். அவரிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவருக்கும், பெங்களூர், அகமதாபாத்தில் குண்டுவெடிப்புகளை நடத்தியவர்களுக்கும் இடையே தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
புழல் சிறையில் உருவான திட்டம்:
அப்துல் கபூர் தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் அமைப்பில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த 10 வருடங்களாக சென்னையில் உள்ள ஒரு செருப்புக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
ஆனால், அவரது நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமாக இருந்ததால் அவரை தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் அமைப்பு சில காலத்துக்கு முன்பே அவரை இயக்கத்திலிருந்து வெளியேற்றிவிட்டது.
இந்த திட்டத்தை அப்துல் கபூர் தீட்டவில்லை. மாறாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜிஹாத் கமிட்டி என்ற அமைப்பைச் சேர்ந்த அலி அப்துல்லாதான் இந்தத் திட்டத்தை தீட்டியுள்ளார். பிறகு அவர் கபூரிடம் வெடிகுண்டுகளையும், டைமர்களையும் தயாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதன் பேரில் கபூர் அவற்றை தயாரித்துள்ளார். அப்போதுதான் நெல்லை போலீஸாரிடம் சிக்கிக் கொண்டார். அலி அப்துல்லா மீது கொலை, குண்டுவெடிப்பு உள்பட 8 வழக்குககள் நிலுவையில் உள்ளன என போலீசார் தெரிவித்தனர்.
நெல்லையில் மேலும் ஒருவர் கைது:
இதற்கிடையே தமிழகத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு பயங்கரங்களை நடத்தத் திட்டமிட்டிருந்த லஷ்கர் இ தொய்பா இயக்க ஆதரவாளரான முகமது அன்வர் பாதுஷா (35) இன்று காலை கைது செய்யப்பட்டார்.
டிஐஜி கண்ணப்பன் உத்தரவின் பேரில் நெல்லை கமிஷனர் மஞ்சுநாதா தலைமையிலான போலீசார் இன்று காலை அன்வரின் வீட்டைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவரிடமிருந்து தீவிரவாத இயக்கங்கள் தமிழகத்தில் நடத்தவிருந்த பயங்கர சதி வேலைக்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
நேற்று இரவு கைது செய்யப்பட்ட அப்துல் கபூர் கொடுத்திருந்த தகவல்களின் அடிப்படையில் அன்வர் பாதுஷாவை போலீசார் சுற்றி வளைத்தனர். கபூரிடம் இருந்த வரைபடங்கள், சதி வேலைத் திட்டங்களின் நகல்கள் அன்வர் பாதுஷாவிடமும் இருந்தன. இவர்களின் கூட்டாளிகள் மேலும் 16 பேர் தப்பிவிட்டனர். அவர்களையும் வலைவீசித் தேடி வருகின்றனர் போலீசார்.
அன்வரை விசாரிக்க சென்னையிலிருந்து கூடுதல் டிஜிபி நடராஜன் நெல்லைக்கு விரைந்துள்ளார்.
மத்திய உளவுப் பிரிவுப் போலீசாரின் எச்சரிக்கை கிடைத்த 12 மணி நேரத்துக்குள் இரு தீவிரவாதிகளையும் அவர்களது பயங்கர திட்டங்களையும் கண்டுபிடித்து தமிழக போலீஸ் சாதனைப் படைத்திருக்கிறது.













Click it and Unblock the Notifications