'ஹிட் லிஸ்ட்டில்' அண்ணா மேம்பாலம்-அறிவாலயம்!

பெங்களூர், அகமதாபாத் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து அனைத்து மாநிலகளிலும் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழக போலீசாரும் உஷார் படுத்தப்பட்டனர். மாநில உளவுப்பிரிவு போலீசார் தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தலைமறைவு தீவிரவாதிகளை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் மிகப் பெரிய சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது. வெடிகுண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அப்துல் கபூர் நெல்லையில் பிடிபட்டார். அவரிடமிருந்து அரைகுறையாக தயாரிக்கப்பட்ட 2 டைம் பாம் குண்டுகளை கைப்பற்றினார்கள்.
அப்துல் கபூரிடம் நடத்திய விசாரணையில் புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தீவிரவாதி அலி அப்துல்லாதான் அங்கிருந்தபடி சதி திட்டங்களை தீட்டி கொடுத்ததாக தெரியவந்தது. தமிழகத்தில் மீண்டும் ஒரு பயங்கர குண்டு வெடிப்பை நிகழ்த்த அலி அப்துல்லா உத்தரவிட்டதும் தெரியவந்தது.
ஆகஸ்ட் 15ம் தேதி நெல்லை மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் பெரும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த இவர்கள் திட்டமிட்டிருந்ததும் கபூர் கொடுத்த வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.
கபூரின் தந்தை சேவுகான். 7ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கபூர் திருமணமானவர். சென்னை, தி.நகர் ரெங்கநாதன் தெருவில் உள்ள செருப்பு கடையில் வேலை பார்த்துள்ளார். போதிய வருமானம் இல்லாமல் கஷ்பட்டு வந்துள்ளார்.
போலீஸாரிடம் கபூர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது.
சென்னை மண்ணடியில் செயல்பட்டு வந்த இறைவன் ஒருவனே' என்ற இயக்கத்தில் சேர்ந்தேன். அவர்கள் நடத்தும் கூட்டத்தில் தொடர்ந்து கலந்து கொண்டேன்.
தவுபிக் என்பவர் அந்த இயக்கத்தின் தலைவராக செயல்பட்டார். நெல்லை டவுனை சேர்ந்த ஹீரா என்ற செய்யது காசிம் இந்த இயக்கத்தின் முக்கிய பிரமுகராக இருந்தார். ஹீரா மூலம் தவுபிக், அப்துல்காதர், அபுதாகீர் ஆகியோரும் எனக்கு அறிமுகமானார்கள்.
கடந்த 1998ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடந்ததுபோல மீண்டும் ஒரு பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற அவர்கள் திட்டமிட்டார்கள்.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதலை முழுக்க, முழுக்க புதிய ஆட்களை வைத்து நடத்த வேண்டுமென்று முடிவு செய்தனர். என்னை அதில் சேர்த்துக் கொண்டனர். டைம்பாம் வெடிகுண்டுகள் செய்வதற்கு எனக்கு பயிற்சி அளித்தார்கள்.
இந்நிலையில், இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கடந்த மே மாதம் 15ம் தேதி போலீசார் ஹீரா, அப்துல்காதர், பழனி உமர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அதில் தவுபிக்கும், அபுதாகீரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் எங்களின் சதித்திட்டம் இடையில் தடைபட்டு நின்றது. நானும் சென்னையை காலி செய்து விட்டு, நெல்லை வந்து விட்டேன்.
பின்னர் ரயில் குண்டுவெடிப்பில் கைதாகி புழல் சிறையில் இருந்த தீவிரவாதி அலி அப்துல்லாவை, ஹீராவும், அப்துல்காதரும் சந்தித்து பேசினர். வருகிற ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திரத் தினத்தன்று, சென்னையில் குண்டு வைத்து மிகப்பெரிய நாசத்தை உண்டாக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த தகவல் ஒரு நபர் மூலம் எனக்கு தெரிவிக்கப்பட்டது. குண்டு வைக்கும் பணிக்கு என்னை தளபதியாக நியமித்துள்ளதாகவும் சொன்னார்கள். தேவையான பண உதவியும் செய்யப்பட்டது. சிறையிலிருந்தபடி அலி அப்துல்லா என்னோடு செல்போனில் பேசி திட்டத்தை விளக்கினார்.
பின்னர் டைம்பாம் வெடிகுண்டு செய்வதற்கான பொருட்களை கொஞ்சம், கொஞ்சமாக வாங்கினேன். எலக்ட்ரிசியன் அன்வர்பாட்ஷா உதவியோடு வெடிகுண்டை செய்ய ஆரம்பித்தேன். ஆனால் அன்வர் பாட்ஷாவுக்கு அது வெடிகுண்டு என்று தெரியாது.
இந்த நிலையில், ஜெயிலில் இருந்து ஹீராவும், அப்துல்காதரும் ஜாமீனில் வெளியே வந்தார்கள். வெடிகுண்டுகளை எடுத்துக்கொண்டு 29ம் தேதி சென்னை வரும்படி அவர்கள் என்னிடம் போனில் தெரிவித்தனர்.
பெங்களூரில் இருந்து வெடிபொருட்களையும், டெட்டனேட்டரையும் ஒரு நபர் கொண்டு வருவதாகவும் ஹீரா என்னிடம் கூறினார். அவர் கூறியபடி, வெடிபொருள் நிரப்பாத பாதி செய்யப்பட்ட 2 டைம்பாம் வெடிகுண்டுகளை எடுத்துக்கொண்டு சென்னை வர தயாரானேன். அதற்குள் போலீசாரிடம் மாட்டிக் கொண்டேன்.
ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தினத்தன்று சென்னை அண்ணா மேம்பாலம், அண்ணா அறிவாலயம் ஆகியவற்றை குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டோம். ஒரு டைம்பாம் குண்டை அண்ணா மேம்பாலத்தில் வைக்க முடிவு செய்தோம். அந்த பணி என்னிடம் கொடுக்கப்பட்டது.
இன்னொரு டைம்பாம் குண்டை சென்ட்ரல் ரயில் நிலையம் அல்லது வேறொரு இடத்தில் வைக்க ஹீரா திட்டமிட்டிருந்தார். அதற்குள் எங்களை போலீசார் கைது செய்துவிட்டனர் என்று கபூர் கூறியுள்ளார்.
தற்போது பெங்களூரில் இருந்து வெடிபொருளுடன் நெல்லை வருவதாக கூறிய மர்ம நபரை பிடிக்க போலீசார் வலைவிரித்துள்ளனர்.
தமிழக போலீஸாரின் திறமையான நடவடிக்கையால் சென்னை நகரம் பெரும் ஆபத்திலிருந்து தப்பிப் பிழைத்துள்ளது.












Click it and Unblock the Notifications