போதை வாலிபர்..மின் வயரை தொட்டு சாவு
திருப்பூர்: குடிபோதையில் மின் கம்பத்தில் ஏறிய வாலிபர் உயர் அழுத்த மின் கம்பியை தொட்டதில் பலியானார்.
கோவை மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரும்புரவி பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (30). திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்தார். ஆறுமுகத்துக்கு குடிபழக்கம் உண்டு. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதால் தகராறு நடக்கும்.
இந் நிலையில் நேற்று முன்தினம் வேலை செய்ய திருப்பூருக்கு சென்றார். இரவு அதிகமாக மது அருந்தினார். திருப்பூர் தாராபுரம் ரோடு சந்திராபுரம் பிரிவு அருகே நின்று கொண்டு, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக குடிபோதையில் கூறினார்.
இதை பார்த்த அப்பகுதியினர், குடிபோதையில் உளறுகிறார் என்று நினைத்து ஆறுமுகத்தை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். இரவு 11.30 மணியளவில் திடீரென்று சந்திராபுரம் பிரிவு புறக்காவல் நிலைய கட்டிடத்தின் அருகே இருந்த மின் கம்பத்தில் ஏறி உச்சிக்கு சென்றார்.
அங்கிருந்த உயர் மின் அழுத்த கம்பியை கையால் பிடித்தார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியானார்.
தகவலறிந்த திருப்பூர் தெற்கு போலீசாரும், மின்வாரிய உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதிகாலை 2 மணியளவில் மின் சப்ளையை துண்டித்த மின்வாரிய ஊழியர்கள், மின்கம்பத்தில் ஏறி, ஆறுமுகத்தின் பிணத்தை மீட்டனர்.


Click it and Unblock the Notifications
