சார்க் மாநாட்டின்போது மன்மோகனுடன் பேசுகிறார் கிலானி
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தான் பிரதமர் யூசூப் ரஸா கிலானியும் இலங்கையில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் வரும் சனிக்கிழமை 15வது சார்க் மாநாடு தொடங்குகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங் நாளை கொழும்பு செல்கிறார்.
இந்த மாநாட்டின்போது பாகிஸ்தான் பிரதமர் கிலானியுடன், மன்மோகன் சிங் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மலர்ந்த பின்னர் இருநாட்டு பிரதமர்களும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
இருநாட்டு பிரதமர்களும் சந்திப்பதற்கான தேதி மற்றும் நேரம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநாட்டின்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரோஷியும் சந்தித்து பேச உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்திய தூதரகம் தாக்கப்பட்டது. பெங்களூர் மற்றும் அகமதாபாத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் ஆகியவை குறித்தும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத தாக்குதல் குறித்து பேசப்படும் என்று தெரிகிறது.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் இறந்தார். பாகிஸ்தானின் அத்து மீறல் குறித்தும், இந்தியா மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளை அடக்கி வைக்கும்படியும் கூறப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications