அமர்நாத்-பாஜக சிறை நிரப்பும் போராட்டம்
டெல்லி: அமர்நாத் கோயிலுக்கு நிலம் வழங்கும் உத்தரவை திரும்ப பெற்றதை கண்டித்து வரும் 11 முதல் 13ம் தேதி வரை தேசிய அளவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் போவதாக பாஜக அறிவித்துள்ளது.
அமர்நாத் கோயிலுக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள் தங்குவதற்கு தங்கும் விடுதி மற்றும் ஓய்வறைகள் கட்டுவதற்காக காஷ்மீர் மாநில அரசு 100 ஏக்கர் நிலத்தை வழங்கியது. அதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி அந்த உத்தரவை அரசு திரும்பப் பெற்றது.
இதற்கு இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக அங்கு பெரும் கலவரம் நடந்து வருகிறது.
இந் நிலையில் அரசின் இந்த முடிவை கண்டித்து நாடு தழுவிய சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த பாஜக முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பாஜக துணை தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது: அமர்நாத் குகைக் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக 100 ஏக்கர் நிலத்தை காஷ்மீர் மாநில அரசு வழங்கியது. அடிப்படைவாதிகளின் உணர்வுக்கு அடிபணிந்து, அவர்களை திருப்திபடுத்துவதற்காக அந்த உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது.
நிலம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் போராட்டக்காரர்கள் என்றும் உண்மையான போராட்டக்காரர்களை தீவிரவாதிகள் போலவும் நடத்துவது வினோதமாக உள்ளது.
கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை, உணர்வு, மத்திய அரசும், காஷ்மீர் மாநில அரசும் கருத்தில் கொள்ளவில்லை. அடிப்படைவாதிகளிடம் காஷ்மீர் அரசு சரணடைவதை பொறுத்துக் கொள்ள முடியாது.
இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்களின் உணர்வுகளை முன்வைத்து பாஜக சார்பில் வரும் 11 முதல் 13ம் தேதி வரை சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைதியான முறையில் நாடு முழுவதும் இந்த போராட்டம் நடத்தப்படும். நாட்டின் ஆதரவு ஜம்மு மக்களுக்கு உண்டு என்பதை உணர்த்தும் வகையில் இந்த போராட்டம் அமையும்.
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் நடக்கும் இந்த போராட்டத்தை அந்தந்த மாநில எம்பிக்களும் எம்எல்ஏக்களும் தலைமை வகித்து நடத்துவார்கள்.
பாஜக மற்றும் தே.ஜ. கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களிலும் போராட்டங்கள் நடக்கும். ஆனால் அம்மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இதில் கலந்து கொள்ள விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications