தமிழகம்-வருவாய் ரூ.51,506 கோடி: பற்றாக்குறை ரூ.9,792 கோடி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: அதிமுக ஆட்சியில் இருந்ததை விட அரசின் மொத்த வருவாய் ரூ. 17,546 கோடி உயர்ந்துள்ளதாகவும், மொத்த நிதிப்பற்றாக்குறை ரூ. 9,792 கோடியாக உள்ளதாகவும், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்புடன் கணக்கிடுகையில் இது 2.98 சதவீதம் தான் என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாநில அரசு வெளியிடும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படும் சுமார் ரூ. 60,000 கோடி தவிர; மத்திய அரசு ரூ. 40,000 கோடியை நமது மாநிலத்துக்கு வழங்குவதாக ஒரு புள்ளி விவரம், மத்திய அமைச்சர்கள் சிலரால் கூறப்படுகிறதல்லவா; அந்தத் தொகை நமது மாநிலத்திற்கு எந்த வகையில் வழங்கப்படுகிறது என்பதற்கான விவரங்களை விளக்கிட விரும்புகிறேன்.

சிங்கம் நடந்து வரும்போது எவ்வளவு தூரம் எப்படி நடந்து வந்திருக்கிறோம் என்பதை பின்நோக்கி திரும்பிப் பார்த்துக் கொள்ளும், அதற்குப் பெயர் அரிமா நோக்கு' என்பார்கள். அதைப்போல 5வது முறையாக தமிழகத்தின் முதல்வராக பொறுப்பை ஏற்ற பிறகு, இதுவரை 3 பட்ஜெட் அறிக்கைகள், 3 ஆளுநர் உரைகள் தமிழக சட்டமன்றத்திலே வைக்கப்பட்டு, அவற்றில் பல்வேறு அறிவிப்புகள் செய்யப்பட்டு, அவைகள் எல்லாம் தொய்வில்லாமல் நிறைவேற்றி வருகின்ற நேரத்தில் ஒருமுறை திரும்பப் பார்த்துக்கொள்வது உசிதமென்று நினைக்கிறேன்.

2006-2007ம் ஆண்டிற்கான ஆளுநர் உரையில் மொத்தம் 45 அறிவிப்புகள் செய்யப்பட்டு; அவற்றில் 32 அறிவிப்புகள் மீது அரசாணை பிறப்பிக்கப்பட்டு, பணிகள் நிறைவேற்றப்பட்டு முடிந்துள்ளன. 11 அறிவிப்புகள் மீது அரசாணை வெளியிடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. 2 அறிவிப்புகள் மீது மட்டும் அரசாணை வெளியிடப்பட வேண்டியுள்ளது.

2007-2008ம் ஆண்டிற்கான ஆளுநர் உரையில் மொத்தம் 23 அறிவிப்புகள் செய்யப்பட்டன. அவற்றில் 21 அறிவிப்புகள் மீது அரசாணை வெளியிடப்பட்டு, பணிகள் முடிவுற்று விட்டன. 2 அறிவிப்புகள் மீது அரசாணை வெளியிடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆணை வெளியிடப்பட வேண்டிய அறிவிப்புகள் எதுவும் மிச்சமில்லை.

2008-2009ம் ஆண்டிற்கான ஆளுநர் உரையில் 34 அறிவிப்புகள் செய்யப்பட்டன. 15 அறிவிப்புகள் மீது அரசாணைகள் வெளியிடப்பட்டு, பணிகள் முடிவுற்றுவிட்டன. 11 அறிவிப்புகள் மீது அரசாணைகள் வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 8 அறிவிப்புகள் மீது அரசாணை வெளியிடப்பட வேண்டியுள்ளது.

ஆக ஆளுநர் உரைகளை பொறுத்தவரை இதுவரை மொத்தம் 102 அறிவிப்புகள் வெளியிடப்பட்டதில் 10 அறிவிப்புகள் மீது மட்டுமே அரசாணை வெளியிடப்பட வேண்டியது பாக்கியுள்ளது.

பட்ஜெட் அறிக்கைகளில் என்று எடுத்துக் கொண்டால், 2006-2007ம் ஆண்டு மொத்தம் 186 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. அவற்றில் 129 அறிவிப்புகள் மீது அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் முடிவுற்றுவிட்டன. 46 அறிவிப்புகள் மீது அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 11 அறிவிப்புகள் மீது தான் அரசாணை வெளியிடப்பட வேண்டியுள்ளது.

2007-2008ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மொத்தம் 170 அறிவிப்புகள், அவற்றில் 107 அறிவிப்புகள் மீது அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் முடிவுற்று விட்டன. 52 அறிவிப்புகள் மீது அரசாணை வெளியிடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. 11 அறிவிப்புகள் மீது தான் அரசாணை பிறப்பிக்கப்படாத நிலை.

2008-2009ம் ஆண்டுக்கான, அதாவது இந்த ஆண்டு பட்ஜெட்டில் மொத்தம் 122 அறிவிப்புகள், இவற்றில் 25 அறிவிப்புகள் மீது அரசாணை பிறப்பிக்கப்பட்டு, பணிகள் அதற்குள் முடிவுற்றுவிட்டன. 35 அறிவிப்புகள் மீதான அரசாணைகள் வெளியிடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 62 அறிவிப்புகள் மீது அரசாணை வெளியிடப்பட வேண்டியுள்ளது.

இவை தவிர, சட்டப் பேரவை நிகழ்ச்சிகளில் தனியாக உரையாற்றும்போதும், பேரவை நடைபெறாத நேரங்களில் தனிப்பட்ட முறையில் அரசு செய்தி வெளியீடுகள் வாயிலாகவும் பல்வேறு அறிவிப்புகள் செய்யப்பட்டு அவைகள் மீதும் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே தமிழ்நாட்டில் சுமார் ரூ. 41,000 கோடி மதிப்பீட்டிலான மத்திய திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.

மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் பங்களிப்பு பொதுவாக 2 வகையாக கிடைக்கப் பெறுகிறது. ஒன்று, மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்.
மற்றொன்று, மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதி உதவி. தமிழ்நாட்டை பொறுத்தவரை, 31.12.2007 அன்று உள்ள புள்ளி விவரங்களின்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்படும் 69 திட்டங்களின் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.41,000 கோடியாகும்.

இது மத்திய அரசின் அனைத்து மாநிலங்களுக்குமான 915 திட்டங்களுக்கான மொத்த மதிப்பீடாகிய சுமார் ரூ. 3.7 லட்சம் கோடியில் ஏறத்தாழ 11 சதவீதமாகும்.

மாநிலங்களின் பட்டியலை ஒப்பிடும்போது, மற்ற மாநிலங்களை எல்லாம்விட மொத்த திட்ட மதிப்பீடு தமிழ்நாட்டிற்குத்தான் அதிகம் கிடைத்துள்ளது.

மத்திய அரசின் மொத்த திட்டங்களில் 11 சதவீதம் நமது மாநிலத்திற்குக் கிடைத்துள்ளது என்பது பெருமைக்குரியதாக இருப்பினும், இது கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணு மின் திட்டங்கள் போன்ற நீண்டகாலமாக செயல்படுத்தப்பட்டு வரும் சில பெரும் திட்டங்களையும் உள்ளடக்கிய தொகை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த 2 திட்டங்களுக்கான மதிப்பீடு மட்டுமே ரூ.17,000 கோடியாகும்.

இவைதவிர, பெரும்பாலும் தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், ரயில்வே துறை மற்றும் சேது சமுத்திர திட்டம் ஆகியவற்றின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இப்போது அனைத்து திட்டங்களுக்கும் சேர்த்து மொத்தமாக இதுவரை சுமார் ரூ.22,000 கோடி செலவிடப்பட்டுள்ளது.

எனவே, ரூ. 41,000 கோடிக்கு திட்ட மதிப்பீடுகளை கொண்ட திட்டங்கள் தமிழகத்திலே நிறைவேற்றப்பட மத்திய அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது என்ற போதிலும், இந்த ரூ. 41,000 கோடிம் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டு விட்டதாக பொருள் அல்ல.

2007-2008ம் ஆண்டிற்கு இத்தனை திட்டங்களுக்குமான ஒதுக்கீடு எவ்வளவு என்றால் ரூ. 4,747 கோடி தான்.

தமிழகத்திலே ரூ. 41,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்றால், தமிழகத்திற்கு அடுத்தபடியாக மராட்டியத்தில் ரூ. 32,650 கோடிக்கு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் திட்டங்கள் தவிர மாநில அரசுக்கு மத்திய அரசிடம் இருந்து நேரடியாக கிடைக்கப்பெறும் நிதி உதவியானது, மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு மற்றும் மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் உதவித் தொகை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

இவற்றில் வரிப்பங்கு நமது அரசியலமைப்பு சட்ட அடிப்படையில் மத்திய அரசு மாநில அரசுக்கு கட்டாயமாக வழங்க வேண்டிய ஒன்றே ஆகும்.

இதன் அளவு மத்திய நிதிக்குழுவால், நிர்ணயிக்கப்பட்டு அதன்படி மாநில அரசின் பங்கினை மத்திய அரசு வழங்குகிறது. மாநில அரசு மூலமாக நிறைவேற்றப்படும் மத்திய அரசின் திட்டங்களுக்கான உதவி, மத்திய- மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கான மத்திய அரசின் பங்கு, திட்ட உதவி மற்றும் நிதிக்குழு மானியங்கள் ஆகியன உதவித் தொகை என்ற தலைப்பின் கீழ் வழங்கப்படுகின்றன.

இந்த அரசு பொறுப்பேற்ற பின் கடந்த 3 ஆண்டுகளில் இவற்றின் கீழ் தமிழ்நாட்டிற்கு கிடைத்த தொகை வருமாறு:

1. 2006-2007ம் ஆண்டு மத்திய வரிகளில் பங்கு- ரூ.6,394 கோடி. உதவித் தொகை ரூ.3,325 கோடி. மொத்தம் - ரூ.9,719 கோடி.

2. 2007-2008ம் ஆண்டு மத்திய வரிகளில் பங்கு ரூ.8,065 கோடி. உதவித்தொகை ரூ.6,532 கோடி. மொத்தம்- 14,597 கோடி.

3.2008-2009ம் ஆண்டு மத்திய வரிகளில் பங்கு ரூ.9,497 கோடி. உதவித் தொகை ரூ.5,576 கோடி. மொத்தம் ரூ.15,073 கோடி.

2007-2008 மற்றும் 2008-2009 நிதி ஆண்டுகளில் மதிப்புக் கூட்டு வரி அமலாக்கம் மற்றும் மத்திய விற்பனை வரிக்குறைப்பு ஆகியவற்றுக்கான இழப்பீடு, மத்திய அரசிடம் இருந்து உதவித் தொகையாக வழங்கப்படுவதால், உதவித் தொகை கணிசமாக உயர்ந்துள்ளது.

மத்திய வரிகளில் கடந்த ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் அதில் இருந்து மாநில அரசுக்கு வழங்கப்படும் பங்கும் உயர்ந்துள்ளது.

2005-2006ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மத்திய வரிகளில் பங்கு மற்றும் உதவித் தொகை சேர்த்து 8,033 கோடி ரூபாய் என்று இருந்ததற்கு மாறாக கடந்த ஆண்டான 2007-2008ம் ஆண்டு 14,597 கோடி ரூபாய் என்றும்,

2008-2009 ஆம் ஆண்டுக்கு 15,073 கோடி ரூபாய் என்றும் உயர்ந்திருப்பதை பார்க்கும்போது இந்த இரண்டரை ஆண்டுகளில் மத்திய உதவித் தொகை 7,049 கோடி ரூபாய் என்ற அளவிற்கு, அதாவது இரண்டு மடங்கு அளவிற்கு பெருகியிருப்பதை காணலாம்.

மத்திய அரசின் சார்பாக வரும் வருவாயை தவிர்த்து- மாநில அரசின் மூலம் கிடைக்கின்ற வருவாய் என்ற அளவில் மட்டும் எடுத்துக் கொண்டால் வணிக வரிகள், மாநில ஆயத்தீர்வைகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுக் கட்டணங்கள், வண்டிகள் மீதான வரிகள், ஏனைய வரிகள், மற்றும் வரி அல்லாத வருவாய்கள் என்ற தலைப்பில் தமிழக அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.

2005-2006ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வணிக வரிகள் மூலமாக கிடைத்த வருவாய் ரூ. 16,646 கோடி. 2008-2009ம் ஆண்டு இந்த வருவாய் ரூ. 20,798 கோடியாக உயர்ந்துள்ளது.

மாநில ஆயத்தீர்வைகள் என்ற தலைப்பில் 2005-2006ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ரூ. 3,177 கோடியாக இருந்த வருவாய் 2008-2009ல் ரூ. 5,330 கோடியாக உயர்ந்துள்ளது.

முத்திரைத் தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுக் கட்டணங்கள் என்ற தலைப்பில் 2005-2006ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ரூ. 2,085 கோடியாக இருந்த வருவாய், தற்போது ரூ.4,889 கோடியாக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் மொத்த சொந்த வருவாய்கள் என்ற தலைப்பில் எடுத்துக் கொண்டால், 2005-2006ல் அதிமுக ஆட்சியில் ரூ. 25,827 கோடியாக இருந்த வருவாய் 2008-2009ம் ஆண்டு ரூ. 36,433 கோடியாக உயர்ந்துள்ளது.

மாநில வருவாயுடன், மத்திய அரசின் மூலமாக கிடைக்கின்ற வருவாயையும் சேர்த்து பார்த்து வைத்தால் 2005-2006ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மொத்த வருவாய் வரவு ரூ. 33,960 கோடி.

2008-2009ல் திமுக ஆட்சியில் மொத்த வருவாய் வரவு ரூ. 51,506 கோடி. கிட்டத்தட்ட ரூ. 17,546 கோடி இந்த இரண்டரை ஆண்டுகளில் வருவாய்க்கணக்கில் உயர்ந்துள்ளது.

செலவுகளை எடுத்துக் கொண்டால், 2005-2006ல் ரூ. 32,009 கோடி ரூபாயாக இருந்தது. இந்த அரசு ஏழை எளியோருக்கு பல நலத்திட்டங்களளை செயல்படுத்தி வருவதால் 2008-2009ல் செலவு ரூ. 51,422 கோடியாக உயர்ந்துள்ளது.

மூலதன கணக்கை ஒப்பிட்டு பார்க்கையில் அதிமுக ஆட்சியில் மூலதன செலவு ரூ. 4,055 கோடி என்பதற்கு மாறாக இந்த அரசு அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகளை அதிக அளவிற்கு எடுத்துக் கொண்ட காரணத்தால் 2008-2009ம் ஆண்டில் ரூ. 9,373 கோடி என்ற அளவிற்கு உயர்ந்து, அதன் காரணமாக மொத்த நிதிப்பற்றாக்குறை நடப்பு ஆண்டு ரூ. 9,792 கோடி என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.

மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்புடன் இதை கணக்கிடுகையில் 2.98 சதவீதம் என்ற அளவிற்கு நிதிப்பற்றாக்குறை உள்ளது.

இவ்வாறு அரசின் செலவினம் பெருமளவிற்கு உயர்ந்துள்ள போதிலும், நிதிப்பற்றாக்குறையின் அளவு பொருளாதார நிபுணர்கள் மற்றும் மத்திய அரசு நிர்ணயித்துள்ள நிதிநிலை இலக்குகளுக்கு உட்பட்டே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கருணாநிதி கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+