சென்னையில் மேலும் 2 விடுதலை புலிகள் கைது

இலங்கையில் போர் மூண்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை க்யூ பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர். கடந்த 29ம் தேதி விடுதலை புலிகளின் கடல் புலிகள் பிரிவைச் சேர்ந்த தம்பி அண்ணா (எ) டேனியலை க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் க்யூ பிரிவு போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் சென்னை திருமங்கலம் பகுதியில் போலீசார் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுத்தனர்.
சந்தேகப்படும் வகையில் யாராவது இருந்தால் தகவல் தெரிவிக்கும்படி கூறினர். இதையடுத்து திருவல்லீஸ்வரர் நகர், இளங்கோ தெருவில் ஒரு வீட்டில் சந்தேகத்துக்குரிய வகையில் தங்கியிருப்பதாக நேற்று இரவு இணை போலீஸ் கமிஷனர் பாலசுப்ரமணியத்துக்கு ஒருவர் போன் மூலம் தகவல் கொடுத்தார்.
உடனே துணை கமிஷனர் பாண்டியன், உதவி கமிஷனர் அசோக்குமார், திருமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீஸ் படையினர் அங்கு விரைந்து சென்று வீட்டை சுற்றி வளைத்தனர்.
அங்கிருந்த இருவரை கைது செய்தனர். அவர்கள் உமா ரமணன் (23) மற்றும் அமலன் (27) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொட்டாஷியம் நைட்ரேட் 1.5 கிலோ, 60 பேட்டரிகள், சூரிய சக்தி மின் விளக்குகள், மின் அணு பொருட்கள், 2 மூட்டை மோட்டார் உதிரி பாகங்கள், ஸ்பார்க் ப்ளக், வயர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள் இருவரும் விடுதலைப்புலிகள் ஆயுத பிரிவை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களோடு தங்கியிருந்த 3வது நபர் யார் என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தமிழகம் வந்துள்ள மற்ற விடுதலை புலிகளை பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.
சென்னை கீழ்க்ககட்டளையில் கைது செய்யப்பட்ட செல்வக்குமார் என்பவருக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications