பயங்கர தீ-தப்பியது மன்னார்குடி கோவில் தேர், வீடுகள் சாம்பல்
திருவாரூர்: மன்னார்குடியில் ஏற்பட்ட தீ விபத்தில் ராஜகோபால ஸ்வாமி கோவில் தேர் அதிர்ஷ்டவசமாக தப்பியது. இந்த விபத்தில் 35 வீடுகள் எரிந்து நாசமாயின.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்திப் பெற்ற அருள்மிகு ராஜகோபால ஸ்வாமி உள்ளது. கோவிலை சுற்றியுள்ள மாடவீதிகளில் குடியிருப்புகள் உள்ளன.
மேலவீதியில் வசிக்கும் மூக்கன் என்பவர் அவரது வீட்டின் பின்னால் குப்பைகளை போட்டு எரித்தார். எதிர்பாராத விதமாக அந்த தீ வீடுகளுக்கு பிடித்தது. மேலவீதி மற்றும் தெற்கு வீதிகளில் உள்ள வீடுகளுக்கு தீ மளமளவென பரவியது. இதில் 35 வீடுகள் எரிந்து சாம்பலாயின.
வீடுகளில் இருந்த கேஸ் சிலிண்டர்களும் வெடித்து சிதறின. உயிர் பிழைத்தால் போதும் என்று வீட்டில் இருந்தவர்கள் பொருட்களை எடுக்காமல் அப்பகுதியை விட்டு ஓடினர்.
தகவலறிந்த மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி தீயணைப்பு படையினர் 4 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு வந்தனர். வீதிகள் மிகவும் குறுகலாக இருந்ததால் தீயணைப்பு வண்டிகள் தெருவுக்குள் நுழைய முடியவில்லை.
அதற்குள் வீடுகளில் இருந்து வெடித்து சிதறிய சிலிண்டர் மற்றும் ஆணி, இரும்பு போன்ற பொருட்கள் பயங்கர வேகமாக தெரித்து விழுந்தன. அப்படி வெடித்து சிதறிய துண்டுகள், சுமார் 1,500 அடி தொலைவில் இருந்த ராஜகோபால ஸ்வாமி கோவில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்மன் தேர், மற்றும் யானை வாகன கொட்டகையில் விழுந்தன.
இதனால் தேர் மீது போடப்பட்ட கூரையும், யானை வாகன கொட்டகையிலும் தீப்பிடித்து. இதை பார்த்த அப்பகுதியினரும், கோவிலுக்கு வந்த பக்தர்கள் போராடி தேரையும், யானை வாகனத்தையும் தீயில் இருந்து மீட்டனர். எனினும் தேருக்கும் யானை வாகனத்துக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கொட்டகையில் கட்டிவைக்கப்பட்டிருந்த கோவில் யானை செங்கமலத்தை பாகன் ராஜா உடனடியாக வெளியேற்றினார். கோவிலினுள் பாதுகாப்பான இடத்தில் யானையை கட்டி வைத்தனர்.
பின்னர் போராடி தீயை அணைத்தனர். இதில் யானை வாகன கொட்டகை, கடைகள், 35 வீடுகள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பாலானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications