ஆந்திராவில் தொடர்ந்து கன மழை - வெள்ள பலி 53 ஆனது
ஹைதராபாத்: ஆந்திராவில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த அழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடந்த 5ம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
ஹைதராபாத் உள்பட ஆந்திராவின் வடக்கு கடற்கரை மற்றும் தெலுங்கானா பகுதிகளில் உள்ள 8 மாவட்டங்கள் இந்த மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
இதில் வீடுகள் பல இடிந்து விழுந்தன. மழை வெள்ளத்தில் சிக்கி 42 பேரும், வீடுகள் இடிந்து விழுந்ததில் 11 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். வீதிகளில் வெள்ளம் சூழந்துள்ளதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஹைதராபாத்-விஜயவாடா மற்றும் பத்ராசலம்-விஜயவாடா பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பக்கத்து மாநிலமான ஒரிஸ்ஸாவிலும் மழை பெய்து வருவதால் ஆந்திராவில் உள்ள வம்சதாரா மற்றும் நாகவல்லி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. முக்கிய நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் இந்த மழையில் நாசமடைந்துள்ளன.
குண்டூர் மாவட்டம் கப்ரா அணையில் நீர் நிரம்பி வழிவதால் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஹூசைன் சாகர் ஏரியின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. அதன் மொத்த கொள்ளளவு 515 அடியாகும். தற்போது அங்கு 513 அடி நீர் நிரம்பியுள்ளது. மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. படகுகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் ரயில் ரத்து:
மகாராஷ்டிர மாநிலம் புனேவிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் புனே-மும்பை, மும்பை-பெங்களூரு, மும்பை-நாகர்கோவில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சிப்லூன், ராஜாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 அடிக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் புனே நோக்கி செல்லும் அனைத்து ரயில்களும் கர்ஜட் என்ற பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
வெள்ளத்திற்கு 70 கிராமங்கள் தனித் தீவாக மாறியுள்ளன. கோலாப்பூரில் அதிகபட்சமாக 1,266 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications